பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ், அஹ்மத் ஜாஹிட் ஹமீடியைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பல கட்சித் தலைவர்களின் எதிர்ப்பைத் தவிர, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த ஜாஹிட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் இடையே நடந்த விவாதங்களைக் காட்டும் ஆடியோ பதிவு ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவியது.
பதிவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அது அம்னோ வட்டாரங்களில் பரவியுள்ளது, அம்னோவுக்குள் மோதல்கள் இப்போது தீவிரமடைந்து வருவதை அது காட்டுகிறது.
இன்று, ஃபிரி மலேசியா டுடே செய்தியின்படி, ஜாஹிட் அம்னோ தலைவராகவும் தேசிய முன்னணி தலைவராகவும் நீடித்தால், 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நஸ்ரி எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம், ம.இ.கா. வருடாந்திரப் பொது கூட்டத்தில் நடந்தது, ஜாஹிட்டைத் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் மதிக்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் மேற்கோள் காட்டினார்.
“தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் அவரை (ஜாஹித்) மதிப்பதாகத் தெரியவில்லை. கடந்த வார இறுதியில், ம.இ.கா. ஆண்டுப் பொது கூட்டத்தில், பிரதமர் முஹைதீன் யாசின் பிரதிநிதிகளுக்கு உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.
“அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவர் வலுவாக இருந்தால், எந்தவொரு உறுப்புக் கட்சியும் வெளியாட்களை அழைக்க நினைக்காது. இது மிகவும் சங்கடமான விஷயம்,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.
பெர்சத்துவுடன் இனி ஒத்துழைப்பு இல்லை என ஜாஹிட் முடிவெடுத்திருந்தாலும், அம்னோ தலைவர்கள் சிலர், கட்சி பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற நஸ்ரி, தற்போது நீதிமன்றத்தில் 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஜாஹிட்டிடமிருந்து துணைத் தலைவர் மொஹமட் ஹசான் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
“அவர் இருக்கும் வரை, அம்னோ அவரது வழக்கு விசாரணைகள் காரணமாக ஒரு சுத்தமான கட்சியாக பார்க்கப்பட மாட்டாது.
“ஜாஹிட் இராஜினாமா செய்தால், கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் பிரச்சினை எழாது, ஏனென்றால் நாங்கள் (அம்னோ) வரிசையைப் பின்பற்றுகிறோம். தோக் மாட் (முகமது ஹசான்) பொறுப்பேற்பார்,” என்று அவர் மேலும் கூறினார்.
முகமது அம்னோவை வழிநடத்த முடியும் என்றும், கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று, சிம்பாங் ரெங்கம் அம்னோ தலைவர் ஜகாரியா துல்லாவும் ஜாஹிட்டைப் பதவி விலகுமாறு வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், அம்னோ தேர்தலை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கும் திட்டத்திற்கும் ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. அந்த ஒத்திவைப்பு ஜாஹிட் தலைமை பதவியில் இருக்க அனுமதிக்கும்.
அம்னோ அரசியலமைப்பின் படி, கட்சி தேர்தல் 18 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படலாம்.