`14 கடைகள் உடைக்கப்பட்டன, அரசு ஏழைகளைக் ‘கொடுமை’ செய்கிறது` – பி.எஸ்.எம். வருத்தம்

நேற்று, பாங்கி லாமா, கம்போங் மாணிக்கத்தில், குறைந்த வருமானம் பெறும் வர்த்தகர்களுக்குச் சொந்தமான 14 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை, சிலாங்கூர் பி.எச். அரசாங்கத்தின் கொடுங்கோன்மை என வர்ணித்த மலேசிய சோசலிசக் கட்சி பி.எஸ்.எம். வருத்தம் தெரிவித்துள்ளது.

நேற்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன், 40 ஆண்டுகளாக அக்கடைகள் இயங்கி வருகின்றன, அதில் கார் சீர்படுத்தும் கடைகள், உணவகங்கள், பூக்கடைகள் மற்றும் தையல் கடைகள் என பல்வகை கடைகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

“இன்று இப்பிரச்சினைகளை பி.எச். அரசியல்வாதிகள் கையாளும் விதம் மிகவும் வருத்தமாகவும், கொடூரமாகவும், ஆணவமாகவும் இருக்கிறது. பி.கே.ஆரைச் சேர்ந்த மந்திரி பெசார், அமானாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் டி.ஏ.பி.யைச் சார்ந்த எம்.பி. என அனைத்து பி.எச். கட்சிகள் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட பகுதி இது.

“இது ஓர் எதிர்க்கட்சி பகுதி அல்ல. அதிகப் பொருளாதார நடவடிக்கைகள் இல்லாத ஒரு நகரத்தில், சாதாரண மக்களைப் பி.எச். நடத்தும் விதம் இதுதான் என்றால், மலேசியர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்,” என்று அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு, காஜாங் நகராட்சி மன்றம் (எம்.பி.கே.ஜே), மாவட்ட மற்றும் நில அலுவலகங்களைக் குறை கூற விரும்பவில்லை என்றும், காரணம் அவர்கள் கொள்கைகளை நடைமுறைபடுத்துபவர்கள் மட்டுமே என்றும் அருட்செல்வன் சொன்னார்.

தொடர்பு கொண்டபோது, ​​சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹர், மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் எம்.பி.கே.ஜெ.வுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, கடைகளை இடிப்பதைத் தாமதப்படுத்த முயற்சித்ததாகக் கூறினார். அக்கடிதத்தின் பிரதி மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஷி ஹான் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகவும் சொன்னார்.

அருகில், புதிய வீட்டுப் பகுதிகள் அதிகரித்ததால், கடைகள் அமைந்துள்ள சாலை நெரிசலானது என்று அவர் கூறினார்.

இந்தப் பகுதியின் அருகில், புதிய சமூக மையம் ஒன்றின் கட்டுமான இடமும் உள்ளது என்று அவர் கூறினார்.

எனவே, நெரிசலைக் குறைக்க அல்லது அருகிலுள்ள சமூக மையத்திற்கு வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க, சாலையை அகலப்படுத்த இப்பகுதி பயன்படுத்தப்படலாம் என்றார் அவர்.

“நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது, ஆனால் அவ்வாறு செய்ய அவசரம் இல்லை.

“இப்போது தொற்றுநோய்க்கு மத்தியில், வர்த்தகர்கள் வருமானத்தை உருவாக்க வேண்டும் […] இடிப்பதற்கு முன்பு அவர்களை இடமாற்றம் செய்திருக்க வேண்டும்,” என்று மஸ்வான் மலேசியாகினியிடம் கூறினார்.

இடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் சந்தை பகுதிக்கு, உடனடியாக வர்த்தகர்களை இடம் மாற்றுமாறு எம்.பி.கே.ஜே.-ஐ வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

“சந்தையில், நிறைய இடங்கள் உள்ளன, ஆனால் (அந்த சந்தையில்) எட்டு இடங்கள் மட்டுமே வர்த்தகப் பயன்பாட்டில் உள்ளது, நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன.

“இந்த இடத்தை உடனடியாக எம்.பி.கே.ஜே. வழங்க முடியும், (கருத்தில் கொண்டு) காரணம் இது எம்.பி.கே.ஜே.-இன் சந்தை (சொந்தமானது),” என்று அவர் கூறினார்.

வர்த்தகர்களைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான குறுகிய கால மாற்றுத் திட்டங்களைக் கண்டுபிடிப்பதற்காக மஸ்வானுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பாங்கி எம்.பி. ஓங் கியான் மிங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.