RM975 நிலுவைத் தொகை காரணமாக, வீடு ஏலம் விடப்பட்டது

மூத்தக்குடி ஒருவர், வங்கிக் கடன் தடை காலத்தில், RM975 நிலுவைத் தொகை காரணமாகத் தனது வீடு ஏலம் விடப்பட்டதாகக் கூறினார்.

60 வயதான பி லெட்சுமி, மத்திய வங்கியின் தலையீட்டிற்கு விண்ணப்பிக்க தலைநகரில் உள்ள தேசிய வங்கி கட்டிடத்தின் முன் ஒரு குழுவினருடன் கூடியிருந்தார்.

ஏலத்தில் வீட்டை வாங்கியவர், தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்களைத் துண்டித்துவிட்டதால், இப்போது வேறு ஒருவர் வீட்டில், தற்காலிகமாகத் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, வீட்டின் இணை உரிமையாளரான அவரது மகள் எம்.மோகனா, இந்த பிரச்சினையை தீர்க்க தலையிடக் கோரி, 2015 முதல் தேசிய வங்கிக்கு விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபரில், குடும்ப உறுப்பினர்கள் முதல் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர், இன்று இது இரண்டாவது மனு ஆகும்.

2001-ஆம் ஆண்டில் வீட்டை வாங்கியதாகவும், வங்கிக் கடனை மாதந்தோறும் RM268-ஆக, 20 ஆண்டுகளில் RM31,500 செலுத்தியதாகவும் லெட்சுமி கூறினார்.

இதற்கிடையில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், 2001 முதல் 2020 மார்ச் வரை, லெட்சுமி மாதாந்திரத் தவணைகளை ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தியதாகவும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்றும் கூறினார்.

இருப்பினும், ஜூலை 2018-இல், வங்கி தனது மாதாந்திரக் கொடுப்பனவுகளை லெட்சுமிக்குத் தெரிவிக்காமல் அதிகரித்ததாக அவர் கூறினார்.

“இது ஜூலை 2018 முதல் மார்ச் 2020 வரை, நிலுவைத் தொகை – மூன்று மாதங்கள் – RM975 ஆக அதிகரித்த வேளையில், உரிமையாளர் வழக்கம் போல் RM268 மாதாந்திரக் கட்டணம் செலுத்தி உள்ளார்.

“இன்னும் அதிர்ச்சியூட்டும் வகையில், வங்கி நிலுவைத் தொகையை வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரிவிக்காமல், வங்கிக் கடன்தடை காலத்தில் வீட்டை ஏலத்தில் விட்டது,” என்று அருள் கூறினார்.

அக்டோபர் 2020-இல், வீட்டின் வாசலில் ஒட்டப்பட்ட புதிய உரிமையாளரின் அறிவிப்பைப் பார்த்தபின்னர்தான், தனது வீடு விற்கப்பட்டதை வீட்டு உரிமையாளர் அறிந்தார் என்று அவர் கூறினார்.

“அவர் பி40 குடும்பத்தைச் சார்ந்தவர், 17 ஆண்டுகளாகக் கடன்களைச் செலுத்தி வந்துள்ளார், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டும்.

“இப்போது அவரது வீடு ஏலம் விடப்பட்டுள்ளது, வெறும் RM 975 நிலுவைத் தொகைக்காக, அதுவும் அவர்களது தவறில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்த, வங்கி இன்று அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் எழுத்துப்பூர்வமாக எதுவும் கொடுக்கப்படவில்லை,” என்றும் அருட்செல்வன் கூறினார்.

மலேசியாகினி வங்கியைத் தொடர்பு கொண்டு அதன் பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறது.