அவதூறுகளின் ஆடியோ பதிவு, நாட்டுத் தலைவர்களின் தந்திரம் – அன்வர்

அம்னோ தலைவட் அஹ்மத் ஜாஹித் ஹமீடியுடனான தொலைபேசி உரையாடலில் பதிவு செய்யப்பட்ட குரலின் உரிமையாளர் தான் என்பதை பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மறுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை “அச்சுறுத்த” மற்றும் “கையூட்டு” கொடுப்பதில் தோல்வி கண்ட பின்னர், இந்த ஆடியோ பகிர்வு நாட்டின் தலைமைத்துவத்தின் முயற்சி என்று போர்ட்டிக்சன் எம்.பி.யுமான அன்வர் சொன்னார்.

“நான் என் மறுப்பைப் பதிவு செய்ய விரும்புகிறேன், அதோடு மட்டுமல்லாது, இந்த நாட்டின் தலைமை எந்த தந்திரங்களையும், மிரட்டல்களையும், கையூட்டு கொடுப்பதையும், அப்படி கொடுக்க முடியாமல் போனால், அவதூறு பரப்புவதையும் இது காட்டுகிறது,” என்று அவர் நேற்றிரவு சிலாங்கூரில், பி.கே.ஆர். செயல்பாட்டு அறையைத் தொடங்கும்போது கூறினார்.

நேற்றிலிருந்து, நான்கு நிமிடங்கள் கொண்ட அந்த ஆடியோ பதிவு இயங்கலையில் பரவி வருகிறது, அதில் அன்வாரைப் போன்ற ஒரு குரல், அம்னோ ஆண்டுக் கூட்டத்தை வெற்றிகரமாக கையாண்டதற்காக ஜாஹிட் போன்ற குரலைக் கொண்ட ஒரு நபரைப் புகழ்ந்து பேசுவதாக உள்ளது.

ஆடியோ பதிவில் உள்ள குரல் தன்னுடையதல்ல என்ற ஜாஹிட், போலிஸ் புகார் செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

அம்னோ தலைவர்களிடையே மோதல்களைத் தூண்டுவதற்கு, அந்த ஆடியோ பதிவைப் பயன்படுத்தி அவதூறு செய்வதாக அன்வர் கூறினார்.

“இது எனது வேலை அல்ல. நானும் ஒரு போலிஸ் புகாரைப் பதிவு செய்யுமாறு எனது அதிகாரியிடம் கூறப்போகிறேன், இதற்குக் காரணம் யார் என்று அவர்கள் (போலிஸ்) விசாரிக்கட்டும்.

“சிலர் என்னைப் போலவே குரல் கொண்டிருக்கின்றனர், எனக்குக் கவலையில்லை. வெளிப்படையாகவே அவதூறு முயற்சிகள் உள்ளன, அவர்கள் மிகவும் நுட்பமானவர்கள்,” என்ற அவர், டிஏபியும் அமானாவும் பி.கே.ஆரின் விசுவாசமான பங்காளிகள், இதுபோன்ற ‘அவதூறுகளால்’ பாதிக்கப்பட மாட்டார்கள் என மேலும் சொன்னார்.