பள்ளிகளில் நன்கொடை வழங்குவதை ‘மேல் இடம்’ தடுக்கிறது – டிஏபி குற்றச்சாட்டு

அண்மையில், ஜொகூர், பாலோ 2 தேசியப் பள்ளியில், கோவிட் -19 தொற்றுக்கு இலக்கான சுமார் 200 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதற்குப் பாலோ சட்டமன்ற உறுப்பினர், ஷேக் உமர் பாகரிப் அலி காரணம் கோரியுள்ளார்.

நேற்றிரவு 11.30 மணிக்கு, அடையாளம் தெரியாத ஒரு நபர் தொடர்பு கொண்டு, ‘மேம் இடத்திலிருந்து அழுத்தம்’, எனவே நன்கொடை ஒப்படைப்பு திட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டதாக ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

இதுதொடர்பாக, 2018 மே முதல் கடந்தாண்டு பிப்ரவரி வரையில், ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த ஷேக் உமர், ‘மேலிடத்தின் அறிவுறுத்தல்கள்’ குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது; இதுபோன்ற அறிவுறுத்தல்கள் மேலும் பரவாமல் இருக்க, கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

“எனது அலுவலகம், மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் முகக்கவரிகள் போன்ற நன்கொடைகளையே நாங்கள் வழங்க விரும்பினோம்.

“நேற்று இரவு, அப்பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு, இன்று காலை பள்ளியில் கையளிப்பு செய்யவுள்ளதைத் தெரிவித்தேன்.

“ஆனால், இரவு 11.30 மணியளவில், ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார், தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்த அவர், அந்நிகழ்ச்சியை உடனடியாக இரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

“மார்ச் 5, 2021 அன்று, நான் அப்பள்ளிக்குச் சென்றதிலிருந்து, பள்ளிக்கு ‘மேலிடத்திலிருந்து அழுத்தம்’ வருவதாக அவர் கூறினார்,” என்றார் ஷேக் உமர்.

அன்றைய தினம், கோவிட் -19 சோதனையில் இருந்த மாணவர்கள் மற்றும் கடமையில் இருந்த ஊழியர்களுக்கு உணவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஷேக் உமர் சொன்னார்.

“நன்கொடையாக வழங்கப்பட்ட 200 நன்கொடை பொட்டலங்களைப் பள்ளியில் ஒப்படைக்க மட்டுமே நான் விரும்புகிறேன்.

“தனிப்பட்ட முறையில் அவர்களிடம் ஒப்படைக்கும் எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. எஸ்ஓபி செயல்முறைகளுக்கு இணங்க, மிகவும் கவனமான முறையில் ஏற்பாடு செய்ய பள்ளியால் முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் ஷேக் உமர் விரக்தியுடன்.

மேலும், இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நலன்புரி கடமைகளைப் பள்ளிகளுக்குச் செய்ய அனுமதி இல்லையா? தடைகள் ஏதேனும் உள்ளனவா என்றும் ஷேக் உமர் ராட்ஸியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். கோவிட் -19 தொற்று போன்ற கடினமான காலங்களில், மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கக்கூடாது என்று ஷேக் உமர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தெளிவுபெற மலேசியாகினி பள்ளி மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தைத் தொடர்புகொண்டுள்ளது.