பொது விசாரணையில் ஊடகங்களுக்குத் தடை – எம்.பி.எஸ்.ஏ. விளக்கமளிக்க வலியுறுத்து

இன்று காலை, ஷா ஆலம் நகர மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.), 2021-2035 உள்ளூர் திட்ட வரைவின் பொது விசாரணையில், பத்திரிகையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்ற  எம்.பி.எஸ்.ஏ.-இன் முடிவைச் சுதந்திர பத்திரிகை மையம் (சி.ஐ.ஜே.) மற்றும் கெராக்கான் மீடியா மெர்டேகா (கெராம்) ஆகிய ஊடகக் கண்காணிப்புக் குழுக்கள் கண்டனம் தெரிவித்தன.

“ஊடகங்களுக்கு அழைப்புகள் இல்லை, குடியிருப்பாளர்களுக்கும், திட்டங்களுக்கு முறையான ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்த மற்றவர்களுக்கும் மட்டுமே என்ற காரணத்தினால், பொது விசாரணைகளை மறைக்க ஊடக ஊழியர்களை எம்.பி.எஸ்.ஏ. தடைசெய்ததாக தெரிவிக்கப்பட்டது.

“இது பொது நலனுக்கான விடயம் என்பதால், இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, இது பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும்,” என்று சிஐஜே நிர்வாக இயக்குநர் வத்ஷ்லா ஜி நாயுடு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பொது விசாரணை, இன்று காலை 9:15 மணிக்கு, விஸ்மா எம்.பி.எஸ்.ஏ., ஷா ஆலாமின் விருந்து மண்டபத்தில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

விவாதிக்கப்பட்ட விஷயங்களில், ஷா ஆலம் சமூக வனத்தை வணிக மேம்பாட்டிற்கான இடமாகவும் இடுகாட்டு நிலமாகவும் மாற்ற எம்.பி.எஸ்.ஏ. முன்மொழிந்தது.

ஆனால், சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்த குடியிருப்பாளர்கள், அமர்வுக்கு அவர்களின் “பிரதிநிதிகள்” என்று அறிவுறுத்துவதன் மூலம், ஊடகங்களுக்கு உதவ முயன்றபோது, எம்.பி.எஸ்.ஏ. அதிகாரிகள் அமர்வை செய்தியாக்க முடியாது என்று ஒரு நிபந்தனையை வெளியிட்டதோடு; பத்திரிகையாளர்கள் பதிவு செய்யும் கருவிகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

“ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்வது, பொது நலனுக்கான தகவல்களை வெளியிடுவதில் எம்.பி.எஸ்.ஏ. வெளிப்படையாக இல்லை என்பதையே காட்டுகிறது.

“பொது நலனுக்கான தகவல்கள் வெளியீட்டை அதிகரிப்பதற்கும், ஒவ்வொரு மாநில அரசுத் துறையினரால் செய்யப்படும் தகவல்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் நியாயமான அணுகலை வழங்குவதற்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதற்கும் நோக்கமாக கொண்ட தகவல் சுதந்திரம் (சிலாங்கூர் மாநிலம்) சட்டம் 2011-க்கு இது எதிரானது,” என்று வத்ஷ்லா நாயுடு கூறினார்.

பொது விசாரணைகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை, தடைசெய்தது ஏன் என்பதை எம்.பி.எஸ்.ஏ விளக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஒரு தெளிவான காரணமின்றி, நடந்தச் இந்தச் சம்பவம் குறித்து கெராம் வருத்தம் தெரிவித்தது.

பொது விசாரணை என்று அறிவிக்கப்பட்ட கூட்டம், “தனிப்பட்ட முறையில்” ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தை கெராம் கோரியுள்ளது.