அடுத்தப் பொதுத் தேர்தலில் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக நியமிக்க பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) முடிவு செய்துள்ளது.
பி.கே.ஆர்., டி.ஏ.பி. மற்றும் அமானாவை உள்ளடக்கிய பி.எச். கூட்டணி – எந்தவொரு குழுவுடனும் “பேச்சுவார்த்தைகள்” நடத்தவும், “ஒத்துழைப்பு” நல்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த ஈடுபாடு பி.எச். சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் பொது நலனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அக்கூட்டணி தெளிவுபடுத்தியது.
போர்ட்டிக்சனில், நேற்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தின் போது, கூட்டணித் தலைவர்கள் எடுத்த முடிவுகளில் இதுவும் ஒன்று.
இன்று வெளியிடப்பட்ட, ‘போர்ட்டிக்சன் தீர்மானம்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பி.கே.ஆர். தலைவர் அன்வர், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உள்ளிட்ட முக்கிய பிஎச் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பி.எச். தலைமை மன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் மகளிர் மற்றும் இளைஞர் தலைவர்கள், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுட்டின் ஹருன் மற்றும் பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதம வேட்பாளர், பிறக் கட்சிகளுடன் ஒத்துழைக்க தயார் என்பன தவிர, மேலும் ஐந்து தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. அவற்றுள், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க, மாமன்னருக்கு உடனடியாக பிரதமர் முஹைதீன் யாசின் அறிவுறுத்த வேண்டும் என்பதும் அடங்கும்.
மேலும், பொருளாதார மீட்பு மற்றும் மக்களின் நல்வாழ்வு தொடர்பான கொள்கை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மாநிலத் தலைமையையும் அணிதிரட்டுதல், அத்துடன் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் ஈடுபடுவதற்கான செயல்முறையைத் தொடர வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.