கே.ஜே. : ஆடியோ பதிவினால் ஜாஹிட்டின் நிலை பலவீனமடைகிறது

அம்னோ தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் வலியுறுத்திய ரெம்பாவ் அம்னோ பிரிவு துணைத் தலைவர் கைரி ஜமாலுதீன், கட்சியில் தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் நிலைப்பாடு பலவீனமடைந்து வருவதாகக் கூறினார்.

அஹ்மத் ஜாஹிட் மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் இடையே சமீபத்தில் நடந்த உரையாடல் என்று கூறப்படும் ஆடியோ கசிந்ததைத் தொடர்ந்து இது நடப்பதாக கைரி கூறினார்.

அதைத் தொடர்ந்து, கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, கட்சியின் தேர்தலை விரைவில் நடத்த அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“எங்கள் கட்சித் தலைவருக்கும் அன்வருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலில் கட்சியில் உள்ள பல உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தமட்டில், அஹ்மத் ஜாஹிட்டின் நிலை இப்போது வலுவாக இல்லை, எனவே கட்சி தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல சிறந்த வழி கட்சி தேர்தல் ஆகும், “என்று அவர் கூறினார்.

சுபாங் ஜெயாவில் இன்று சாம்ப்ஸ்-நாசோம் 2021 (CHAMPS-NASOM 2021) ஆட்டிசம் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மையில், அம்னோ பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் நடந்ததாகக் கூறப்படும் அஹ்மத் ஜாஹிட் மற்றும் அன்வார் போன்ற குரல்களைக் கொண்ட இரண்டு நபர்களுக்கிடையேயான உரையாடலின் ஆடியோ பதிவு சமூக ஊடகங்களில் கசிந்தது.

இதற்கிடையில், அம்னோ உதவித் தலைவர் மொஹமட் கலீட் நோர்டின், ஆடியோ பதிவு குறித்த உண்மை அறிய போலிஸாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.

“அவர்கள் (கட்சி) உண்மையை அறிய விரும்புகிறார்கள், அரசியலில், மக்கள் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள், சில நேரங்களில் சிறிய விஷயங்கள் பெரிதாகின்றன. எனவே, எல்லா வகையான விஷயங்களும் நடக்கின்றன. கேள்வி என்னவென்றால், போலிஸ் புகார் இருந்தால், இந்த விவகாரம் விசாரிக்கப்படட்டும்,” என்று அவர் ஜொகூர்பாருவில் நடந்த ஜொகூர் இ-காசே 2021 நலன்புரி நிகழ்ச்சியின் விளக்கக்காட்சி விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உரையாடலின் ஆடியோ பதிவைக் கேட்டீர்களா என்று கேட்டதற்கு, தான் ஆடியோவைக் கேட்டதாகக் கூறிய முகமது கலீட், மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

“நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் ஒரு போலீஸ்காரர் அல்ல. நான் தலைவர்களில் ஒருவன், எனக்கு எனது சொந்த வழி உள்ளது, எனவே என்னால் எந்த எதிர்வினையும் கருத்தும் கொடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா