எம்.என். இறந்துவிட்டதா? – திரெங்கானு பாஸ்-இன் பதில்

மாநில அம்னோவுடனான கருத்து வேறுபாட்டை அவர்களால் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த பாஸ் தலைமையிலான திரெங்கானு மாநில நிர்வாகம், அக்கட்சியின் தலைவர் அஹ்மத் சையத்தை விவாதத்திற்கு அழைத்தது.

அஹ்மத் மாநிலத்தில் உள்ள முவாஃபாக்கட் நேஷனல் (எம்.என்.) கூட்டணியை ‘இறந்துவிட்டது’ என்று வர்ணித்ததோடு, அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ), அம்னோ அனைத்து 32 மாநில இடங்களிலும், 12 நாடாளுமன்ற இடங்களில் எட்டிலும் போட்டியிடும் என்று வலியுறுத்தியது.

மலாய்-முஸ்லிம்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்த, தேசிய ஒருமித்த கருத்தில் (எம்.என்.) இரு கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை பரந்த அம்சங்களின் மூலம் பார்க்க வேண்டும் என்று மனித மேம்பாடு மற்றும் தகவல் பிரிவின் திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் மொஹட் நோர் ஹம்சா கூறினார்.

“ஒருமித்த கருத்தை பலப்படுத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில், இருவரும் பேசத் தயாராக இருந்தால் மேலதிக ஆலோசனையும் கலந்துரையாடலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.

“அம்னோ தலைவர்கள், குறிப்பாக திரெங்கானு மாநில அரசாங்கத்தில் இருப்பவர்கள், தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன், இதன்வழி நாங்கள் சமாதானமாக இருக்க முடியும், பேச்சுவார்த்தை மேசையில் இந்த ஒற்றுமையை உருவாக்க முடியும், விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

“இந்த ஒற்றுமை தொடர்வதைக் காண எந்தக் கேள்விகளும் சிக்கல்களும் பேசி தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் இன்று காலை மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக இன்று, தி மலேசியன் இன்சைட் செய்தித் தளம், அஹ்மத், திரெங்கானுவில் எம்.என். ‘இறந்துவிட்டது’ போல் தோன்றுவதாகவும்; அரசியல் கூட்டணியின் தலைவர்கள் சந்திப்பில் உபசரணைகள் மட்டுமே நடப்பதாகவும், முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கவில்லை என்றும் கூறியதாக செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.