இன்று 1,889 புதிய நேர்வுகள், 40 நாட்களில் அதிக தொற்று

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,889 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், இது மொத்தம் 365,829 தொற்றுநோய்களைக் கொண்டுவருவதாகவும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இன்றைய புதிய நேர்வுகளின் எண்ணிக்கை கடந்த 40 நாட்களில் மிக அதிகமானவை ஆகும்.

இது கடந்த இரண்டு நாட்களில் தொடர்ந்து ஓர் உயர்வான போக்கைக் காட்டுகிறது, நேற்று தினசரி நேர்வுகள் 1,767 -ஆக பதிவு செய்தன.

இதற்கிடையில், மேலும் 8 கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மரணமடைந்துள்ளனர். ஆக, மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இதுவரையில் 1,353.

இன்று 1,485 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 79 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 517 (121,358), சரவாக் – 489 (21,448), கிளாந்தான் – 226 (7,506), சபா – 142 (56,165), கோலாலம்பூர் – 134 (39,248), பினாங்கு – 92 (17,859), ஜொகூர் – 84 (42,526), பேராக் – 56 (13,884), கெடா – 53 (8,945), நெகிரி செம்பிலான் – 51 (17,697), திரெங்கானு – 14 (3,806), பஹாங் – 13 (4,579), புத்ராஜெயா – 8 (1,254), மலாக்கா – 6 (6,797), பெர்லிஸ் – 3 (342), லாபுவான் – 1 (2,415).

இன்று 7 புதியத் திரளைகள் கண்டறியப்பட்ட வேளையில், 10 திரளைகள் நிறைவடைந்துள்ளன.