புதியக் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரிப்பைக் காட்டுவதால், மக்கள் மாநில எல்லைகள் தாண்டி பயணிக்கும் அனுமதிகளைக் காவல்துறை கடுமையாக்கி உள்ளது.
இதுபோன்ற பயணங்களுக்கு அதிகாரிகள் வழங்கிய அனுமதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் சில தரப்பினருக்கு எதிராக, பொதுமக்கள் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் இது செய்யப்பட்டது.
புத்ராஜெயா பண்டார் ப்ரீசிண்ட் 1 காவல் நிலையத்தில் காணப்பட்ட, நேற்றைய தேதியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அதிகாரிகள் மூன்று சூழ்நிலைகளுக்கு மட்டுமே மாநிலத்தைக் கடக்கும் பயணங்களுக்கு அனுமதி வழங்குகின்றனர்.
முதல் காரணம், ஒரு விண்ணப்பதாரரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அவசரநிலை காரணம், அதன் தொடர்புடைய ஆவணங்களால் ஆதரிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது அனுமதி மரணச் சம்பவங்களுக்காகவும், மூன்றாவது அனுமதி நீண்டகாலம் பிரிந்திருக்கும் தம்பதியினரையும் உள்ளடக்கியது.
“திருமணங்கள் மற்றும் பிற விருந்துகளில் கலந்துகொள்ளும் நோக்கத்திற்காக மாநிலங்களைக் கடக்க அனுமதி வழங்கப்படாது,” என்று அறிக்கையை வெளியிட்ட, அந்தக் காவல்நிலையத் தலைவர் ஏஎஸ்பி அஸ்மான் ஜோஹரி ராகிபி கூறினார்.
தேசியக் காவல்துறைத் தலைவரிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த முடிவு, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தப் படம் இன்று பிற்பகல் முதல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
புத்ராஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் ஃபட்ஸில் அலியைத் தொடர்பு கொண்டபோது, அந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
வேலை காரணமான நோக்கங்களுக்காக, மாநிலம் முழுவதும் பயணம் செய்ய இதுவரை எந்தப் போலிஸ் அனுமதியும் தேவையில்லை, ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் முதலாளியிடமிருந்து உறுதிப்படுத்தும் ஆவணத்தை அல்லது துணை ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.
அதே நேரத்தில், சமீபத்தில் சில நபர்கள் – நன்கு பிரபலமான நபர்கள் உட்பட – விடுமுறை அல்லது தேனிலவு போன்றவற்றிகு மாநிலம் முழுவதும் பயணம் செய்வதைக் கண்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பலரின் கவனத்தை ஈர்த்த பின்னர், வணிக விஷயங்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர்.
நேற்று தேசியப் பாதுகாப்பு மன்றம், கோவிட் -19 தடுப்பூசி போடும் நியமனங்களுக்காக, தங்களைச் சார்ந்தவர்களை ஏற்றிச் செல்லும் நபர்களுக்கு மாநிலங்களைக் கடக்கும் பயணத்திற்கு அனுமதி வழங்க முடிவு செய்தது.