செனட்டர் குவான் டீ கோ ஹோய், இன்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன்னிலையில் துணை அமைச்சராகப் பதவியேற்றார்.
இஸ்தானா நெகாராவின் சிங்காசனா கெச்சில் அரங்கில் நடைபெற்ற நியமனம் மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழியை வழங்கும் விழாவில், பார்ட்டி சோலிடாரிட்டி தானா ஆயேர்கு (ஸ்தார்) பொதுச் செயலாளரான குவான் டீ அப்பதவியை ஏற்றார்.
விழாவில் பிரதமர் முஹைதீன் யாசின், தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் மொஹட் ஸூகி அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் நான்சி சுக்ரி மற்றும் வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சர் டாக்டர் ரொனால்ட் கியாண்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், பதவியேற்பு விழாவிற்குப் பின்னர் சந்தித்தபோது, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை குவான் டீ உறுதிப்படுத்தினார்.
“மத்திய (நிர்வாக) அமைச்சரவையில் இணைய, ஸ்தார் கட்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு பிரதமர் முஹைதீன் யாசினுக்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்று அவர் கூறினார்.
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான சுற்றுலாத் துறை புத்துயிர் பெறுவதற்கான விருப்பத்தையும் குவான் டீ வெளிப்படுத்தினார்.
- பெர்னாமா