நேர்காணல் | 2018-ஆம் ஆண்டில், அரசாங்க ஆலோசனைக் குழுவில் (சிஇபி) ஸெட்டி அக்தர் அஸிஸ்-ஐ நியமித்தபோது, அந்தத் தேசிய வங்கியின் (பிஎன்எம்) முன்னாள் ஆளுநரின் கணவரும் அவரது இரண்டு மகன்களும் 1எம்.டி.பி.-யிலிருந்து பணம் பெற்றது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.
சிஇபி-இன் உருவாக்கம் அப்போதையப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கத்திற்குப் பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்க உதவியது.
வங்கி அதிகாரியாக இருந்த செயல்திறனையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சிஇபி உறுப்பினராக ஸெட்டியைத் தேர்வு செய்ததாக முன்னாள் பிரதமர் கூறினார்.
“எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது. ஆனால், ஸெட்டி ஒரு வங்கி அதிகாரியாக மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டினார். மத்திய வங்கி அதிகாரியாக, அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். நான் மிகவும் பிரபலமான ஒருவரை நியமித்தேன்.
“அவருடைய மகனைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. அது அவர்களுடைய பிரச்சனை.
“ஆனால், ஒரு மத்திய வங்கி அதிகாரி என்ற முறையில், அவர் நீண்ட காலமாக நமக்குக் கிடைத்த மிகச் சிறந்தவர்,” என்று அவர் புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஸெட்டியை, சிஇபி-யின் உறுப்பினராக நியமித்தபோது, ஸெட்டியின் கணவர் தவ்ஃபிக் அய்மன் நிர்வகித்த வங்கிக் கணக்கில் 1எம்.டி.பி. பணம் செலுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு பற்றி அவருக்குத் தெரியுமா என்று மலேசியாகினி முன்பு மகாதீரிடம் கேட்டிருந்தது.
மேலும் கருத்து தெரிவித்த மகாதீர், நஜிப் ரசாக் பிரதமராக இருந்தபோதிலிருந்து தான் ஸெட்டியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சொன்னார்.
நஜிப்பின் வங்கிக் கணக்கில் அசாதாரணமாகச் செலுத்தப்பட்டிருந்த பணம் பற்றி ஸெட்டி அறிந்திருந்ததாகவும், முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பியதாகவும் மகாதீர் கூறினார், ஆனால் இந்தத் திட்டம் செயல்படத் தவறிவிட்டது.
நிதி சிங்கப்பூர் நிறுவனங்களுக்குச் செல்கிறது
“உண்மையில், நஜிப் (பிரதமராக) இருந்தபோது, நான் ஸெட்டியுடன் பேசினேன். நஜிப் வங்கியில் நிறைய பணம் உள்ளது என்று ஸெட்டிதான் என்னிடம் சொன்னார்.
“அவர் நடவடிக்கை எடுக்க விரும்புவதாகக் கூறினார். அவர் முயன்றார். நஜிப் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை, அவருக்குத் தைரியம் இல்லாமல் போனது.
“நான்கு பேர் கொண்ட குழு அது, காவல்துறை தலைவர் (அந்த நேரத்தில்) நஜிப்பிடம் இந்த நான்கு பேர் கொண்ட குழு பற்றி கூறினார். அட்டர்னி ஜெனரல் நீக்கப்பட்டார்.
“நஜிப் அந்த நால்வர் குழுவை அழித்தார்,” என்று மகாதீர் கூறினார்.
அந்த அறிக்கையில், அந்த நேரத்தில் நான்கு மூத்த அரசு அதிகாரிகள், அதாவது சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அபு காசிம் முகமது, காவல்துறை தலைவர் காலிட் அபுபக்கர் மற்றும் ஸெட்டி ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளது.
1எம்.டி.பி. ஊழல் தொடர்பாக நஜிப் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், அவர்களில் மூன்று பேர் (கனி, அபு காசிம் மற்றும் ஸெட்டி), திட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு நஜிப்பிற்குக் கசிந்ததால், அவர்கள் 2016-ல் மாற்றம் செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் நிறுவனமான அயர்ன் ராப்சோடி லிமிடெட் -க்கு, மொத்தம் 16.22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அனுப்பப்பட்டதாக தி எட்ஜ் செய்தி வெளியிட்டது.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து, சிங்கப்பூர் போலீசார் 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், தேசிய வங்கிக்கு அறிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸெட்டி அப்போது தேசிய வங்கியின் ஆளுநராக இருந்தார்.
1எம்.டி.பி. ஊழலின் சூத்திரதாரி என்று கருதப்படும் ஜோ லோவின் நிறுவனம் / வங்கிக் கணக்கிலிருந்து 16.22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, இப்போது பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக இருக்கும் ஜெட்டிக்கு, இந்தப் பரிவர்த்தனை குறித்து தெரியுமா என ஊழல் மற்றும் பினாமிகளுக்கு எதிரான போர் மையம் (சி4) (The Center for Combat Corruption and Cronyism), கேள்வி எழுப்பியது.
பி.எச். நிர்வாகத்தின் போது, அரசாங்க ஆலோசனைக் குழுவில் அவரை நியமித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிருக்கு இந்த விஷயம் தெரியுமா என்றும் சி4 கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மாதம், புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (சி.சி.ஐ.டி) இயக்குநர் ஜைனுதீன் யாக்கோப், பணமதிப்பிழப்பு தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை சட்டம் 2001 (சட்டம் 613) (‘அம்லா’) கீழ் அந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாகக் கூறியிருந்தார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உதவ, தவ்ஃபிக் மற்றும் அவரது மகன்களில் ஒருவர் கோலாலம்பூர், சி.சி.ஐ.டி. தலைமையகத்திற்கு நேற்று அழைக்கப்பட்டனர்.