சையத் சதிக் : புதிய துணையமைச்சர் நியமனம், மக்களின் வயிற்றை நிரப்புமா?

செனட்டர் குவான் டீ கோ ஹோய் புதிய துணை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் சையத் சதிக், நியமனம் செய்வதற்குக் சில நாட்களுக்கு முன்னர், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தில் பணம் இல்லாமல் போய்விட்டது என்று பிரதமர் முஹைதீன் யாசின் அறிக்கை வெளியிட்டது பற்றியும் சையத் கேள்வி எழுப்பினார்.

பி.என். மக்களை விட, அரசியலைப் பற்றி அதிகம் சிந்திக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

“அரசியல் விஷயங்களைப் பொறுத்தவரை, பல வழிகள் மற்றும் சக்திகள் உள்ளன. வேறொரு மாநிலத்தில் ஒரு கூட்டம் நடத்த விரும்புகிறீர்கள், முடியும். அரசியல் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறீகள், முடியும். நீங்கள் நாடாளுமன்றத்தை மூட விரும்பிகிறீர்கள், உங்களால் முடியும். ஆனால், பொது மக்களுக்கு இது கடினமானது, பல தடைகள் கொண்டது.

“இந்த முறை, சுற்றுலா அமைச்சிற்கு மற்றொரு துணை அமைச்சரை நியமிக்க அரசாங்கம் விரும்புகிறது.

“இப்போது மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, ஆனால் சுற்றுலாத் துறைக்கு ஒரு துணையமைச்சர் நியமனம், இது மக்களின் பசி வயிற்றை நிரப்ப உதவுமா என்பதை அரசாங்கம் ஏன் சிந்திக்கவில்லை என நான் ஆச்சரியப்படுகிறேன்,” என்று அவர் இன்று ஒரு முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12-ம் தேதி, முஹைதீன் அரசாங்கம் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் 600 பில்லியன் டாலர் மற்றும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவ பல தூண்டுதல் தொகுப்புத் திட்டங்களை வகுத்ததாகக் கூறினார்.

இதனால், நாட்டில் அதிகப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது என்று முஹைதீன் கூறினார்.

இதற்கிடையே, ஸ்தார் கட்சியின் பொதுச் செயலாளர் குவான், இன்று சுற்றுலாத் துறையின் துணை அமைச்சராகப் பதவியேற்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சையத் சதிக், மடிக்கணினிகளை வழங்குதல் மற்றும் இ-வோலட் உதவி போன்ற பல அரசாங்க வாக்குறுதிகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.

இபிஎஃப் இருப்புத் தொகையத் திரும்பப் பெறுவது போன்ற உதவி பொதுமக்களின் சொந்தப் பணமாகும், என்றார் அவர்.

“எனவே, இன்றைய அரசாங்கத்தின் முன்னுரிமை இதுதான். மக்களின் உயிர்வாழ்வை விட அரசியல் பிழைப்பு பற்றி பி.என். அரசாங்கம் அதிகம் சிந்திக்கிறது.

“அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர், மக்கள் வேலை இழந்திருக்கிறார்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன, கார்கள் மற்றும் வீடுகள் ஏலம் விடப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.