`அம்னோவுடன் இருக்கை விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, நிறுத்தப்படவில்லை` – ஹாடி

அம்னோவுடன் 15-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ15) இடங்களை விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

பாஸ் தற்போது பெர்சத்துவுடன் மட்டுமே விவாதித்து வருகிறது என்றார்.

ஜிஇ15-க்கான இடங்கள் விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரப்படுவதற்கு முன்னர், அம்னோ ஒரு தெளிவான திசையைக் கொண்டிருக்க வேண்டும், அதன் உள் நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டும் என்று அப்துல் ஹாடி கூறினார்.

“இது (இருக்கை பகிர்வு பேச்சுவார்த்தைகள்) இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. அம்னோவுடன் எங்களுக்கு இன்னும் ஓர் உறவு இருக்கிறது, அம்னோவுக்கு இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன, முதலில் அவர்கள் அப்பிரச்சினைகளைத் தீர்க்கட்டும்.

“நாங்கள் அம்னோவுடனான இருக்கை பேச்சுவார்த்தைகளை நிறுத்தவில்லை, நாங்கள் அதை ஒத்திவைத்துள்ளோம். அம்னோ தனது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், இந்த வாய்ப்பை நாங்கள் முதலில் பெர்சத்துவுடன் (பேச்சுவார்த்தை நடத்த) பயன்படுத்துகிறோம்,” என்று இன்று மராங்கில், ருசிலா மசூதியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

இட விநியோகம் குறித்து, பெர்சத்துவுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது தரப்பு பிரதிநிதிகளை அனுப்பியதாகவும், அம்னோ தற்போது உள் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளதால் அக்கட்சியுடனான கலந்துரையாடல்கள் சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அப்துல் ஹாடி கூறியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

இதற்கிடையில், மலாய் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையிலான எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடனும் பணியாற்ற கட்சி அனுமதிக்கப்படுவதாக பாஸ் உலமா கவுன்சில் முடிவு செய்துள்ளதாக அப்துல் ஹாடி வலியுறுத்தினார்.

“தீவிரமாகச் செயல்படாத, முஸ்லீம் அல்லாத அரசியல் கட்சிகளுடன் நாங்கள் பணியாற்ற முடியும். ஆனால், (கட்சி) நாங்கள் தாராளவாத மலாய்க்காரர்களை நிராகரிக்கிறோம்,” என்றார் அவர்.

  • பெர்னாமா