தேசியக் கூட்டணியின் (பி.என்) பத்து நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ் கோபிகிருஷ்ணன், மலேசியாகினிக்கு எதிராக காவல்துறையில் புகார் பதிவு செய்தார், அந்தச் செய்தித் தளம் வேண்டுமென்றே கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர் டாக்டர் எட்மண்ட் சந்தாரா குமாருக்கு எதிராக தவறான செய்திகளை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று ஓர் செய்தியின் ஆரம்பப் பதிப்பில், ஓர் அரசியல்வாதி கூட்டரசு பிரதேசத் துணையமைச்சராக நியமிக்கப்படுவார் என மலேசியாகினி தவறாக செய்தி வெளியிட்டது.
ஆனால் அச்செய்தி, உண்மையில் ஒரு கூட்டாட்சி துணை அமைச்சரைக் குறிக்கிறது.
“இந்த அவதூறான செய்தி பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, இஸ்தானா நெகாராவின் நல்ல பெயரையும் களங்கப்படுத்தியுள்ளது.
“எனவே, மலேசியாகினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் நேற்று பிற்பகல், செந்தூல் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாகினி நிர்வாக ஆசிரியர் ஆர்.கே. ஆனந்த் மீதும் போலீஸ் அறிக்கை பதிவு செய்தார்.
அச்செய்தி வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, மலேசியாகினி அந்த அறிக்கையைத் திருத்தி, தவறு குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கும் தலையங்கக் குறிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.