கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 8), ஜொகூர் பாரு, தாமான் டாயாவில் உள்ள ஒரு பள்ளியின் முன் தாக்கப்பட்ட 14 வயது மாணவன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ, போலீசார் ஐந்து இளையர்களைப் கைது செய்தனர்.
அதே நாளில், பாதிக்கப்பட்டவர் அளித்த போலிஸ் புகாரைத் தொடர்ந்து, 15 முதல் 17 வயதுடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தென் ஜொகூர் பாரு காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் பட்ஸ்லி மொஹமட் ஸாயின் தெரிவித்தார்.
இரவு 10.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், பள்ளிக்கு முன்னால் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தனக்குத் தெரியாத ஐந்து இளையர்களால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.
“இந்தச் சம்பவம் ஐந்து இளையர்களில் ஒருவரான தனது சகோதரனை கேலி செய்ததாகக் கூறப்படும் மாணவருக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக நடந்ததாகக் கூறப்படுகிறது,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323/506-இன் கீழ், காயம் விளைவித்தல் மற்றும் மிரட்டுதல் தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக மொஹட் பட்ஸ்லி கூறினார்.
- பெர்னாமா