மூடா : ‘ஜிப்ஸ்’ மீதான சந்தேகங்கள் ஐ.பி.சி.எம்.சி. தேவைக்குச் சான்றாகும்

அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்.) இரண்டு மூத்த அதிகாரிகளின் சந்தேகம், அவர்களின் உள் துறைகளில் ஒன்றின் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்கியது, பாதுகாப்புப் படையினரைக் கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் காட்டியது என்று இகாத்தான் டெமோக்கிராடிக் மலேசியா (மூடா) கூறியது.

சம்பந்தப்பட்ட அந்த இரண்டு அதிகாரிகளும், மலேசியக் காவல்துறை தலைவர் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோர் மற்றும் ஜொகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் ஜைடெல் பஹாருட்டின் தெரிவித்தார்.

விசாரணையில் உள்ள சில அதிகாரிகளைப் பாதுகாப்பதாக நம்பப்படுவதால், பி.டி.ஆர்.எம்.-இன் நேர்மை மற்றும் தரநிலைகள் கண்காணிப்புத் துறையின் (ஜிப்ஸ்) செயல்திறன் குறித்து, அப்துல் ஹமீத் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், போலிசாரால் தேடப்படும் நிக்கி லியோ சூன் ஹீ-உடன் தொடர்புடைய பி.டி.ஆர்.எம். உறுப்பினர்களின் பெயர்களை, ஜிப்ஸ்-இடம் ஒப்படைப்பது தனது கடைசி முயற்சியாக இருக்கும் என அயோப் கான் கூறினார்.

அயோப் கான் கருத்துப்படி, சம்பந்தப்பட்ட 34 காவல்துறையினர் மற்றும் அமலாக்க முகவர் நிறுவனங்கள் மீதான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“நடவடிக்கை எடுக்க நான் அதை ஜிப்ஸ்-இடம் விடமாட்டேன். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன்.

“என்னைப் பொறுத்தவரை, நாங்கள் எடுப்பது மிகவும் துல்லியமான, எளிதான, உறுதியான முடிவு,” என்று அவர் ஏப்ரல் 14-ம் தேதி ஜொகூரில் கூறினார்.

மூத்த பி.டி.ஆர்.எம். அதிகாரிகளின் இரண்டு அறிக்கைகளும், அவர்களின் அணிக்கு வெளியே ஒரு விசாரணை மற்றும் சமநிலை அமைப்பை அமைக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டியுள்ளன என்று ஜைடெல் கூறினார்.

“இந்த அமைப்பு பி.டி.ஆர்.எம்.-இல் இருந்து சுயாதீனமாகவும் தனித்தும் இயங்க வேண்டும். அதோடுமட்டுமின்றி, விசாரணைகள் அல்லது தொடர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, சுயாதீன போலிஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று ஜைடெல் முடா கூறினார்.

“ஐபிசிஎம்சியைச் சுயாதீனப் போலிஸ் புகார்கள் ஆணையத்துடன் (ஐபிசிசி) மாற்றுவதற்கான தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் முயற்சி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ அல்லது விசாரணைகளைத் திறம்பட நடத்தவோ எந்த அதிகாரமும் இல்லாததால், அது பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.

“பி.டி.ஆர்.எம். மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பது இன்று அரசாங்கத்திற்கு முக்கியமானது.

“அது மட்டுமல்லாமல், நாட்டின் அமலாக்க அமைப்புகளின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த உள்துறை அமைச்சு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது,” என்றும் அவர் கூறினார்.