அயோப் கான் : காண்டோமினியத்தில் ‘நிக்கி கேங்’ சோதனை, எஸ்.ஓ.பி.யைப் பின்பற்றியது

மார்ச் 20 மற்றும் 21 ஆகியத் தேதிகளில், சிலாங்கூர், புச்சோங்கில் உள்ள திரிகோன் ரெசிடென்ஸ் செத்தியாவாக்-இல், ‘நிக்கி கேங்’ குழுவினரை இலக்கு வைத்து நடந்த ஓப்ஸ் பெலிகன் 3.0, நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி.) ஏற்ப மேற்கொள்ளப்பட்டது எனபதை அரச மலேசியக் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியது.

ஜொகூர் காவல்துறைத் தலைவர், அயோப் கான் மைடின் பிட்சை, சோதனையின்போது, ​​மொத்தம் 45 காண்டோமினியக் கதவுகளின் கைப்பிடிகளை உடைத்து தேடியதாகவும், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மற்றும் நியாயமான காரணங்களுக்காக தேடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அந்தக் காண்டோமினியம், ‘நிக்கி’ கும்பலுக்கு ஒரு மறைவிடமாகவும், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அல்லது சொத்துக்களை வைத்திருக்கலாம் என்றும் போலிசார் சந்தேகித்ததன் காரணமாக அங்குத் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திரிகோன் ரெசிடென்ஸ் செத்தியாவாக் குடியிருப்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது

“சோதனைகள் மற்றும் தேடல்கள் குற்றவியல் நடைமுறைக் குறியீடு மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012-இன் விதிகளுக்கு இணங்கியே நடந்தன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அச்சோதனையைத் தொடர்ந்து, தங்கள் வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டது குறித்து காண்டோமினியக் குடியிருப்பாளர்களின் புகாருக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில், ஜொகூர் தலைமையகப் போலிஸ் படை மற்றும் கோலாலம்பூர், செராஸ், 4-வது பெட்டாலியன் பொது செயல்பாட்டுப் படை சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 220 அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

நிக்கி கும்பல் ‘டத்தோ ஶ்ரீ’ விருது கொண்ட ஓர் உள்ளூர் மனிதரால் வழிநடத்தப்படுவதாக நம்பப்படுகிறது, நிக்கி லியோ சூன் ஹீ, 33, இவர் தற்போது ஏமாற்று மற்றும் பணமோசடி போன்ற பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

லியொ, பூச்சோங், செத்தியாவாக்கைத் தளமாகக் கொண்ட வின்னர் டைனஸ்டி குழுமத்தின் நிறுவனரும் ஆவார்.

-பெர்னாமா