கிளாந்தான் பி.கே.பி. பகுதியில் உள்ள பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன

கிளாந்தானில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (பி.கே.பி.) உள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் வியாழக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

இத்தகவலை, ​​மாநிலத்தின் உள்ளாட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு தலைவர் டாக்டர் இஸானி ஹுசின் உறுதிப்படுத்தினார்.

தொற்று தொடர்பான தகவல்களைப் பற்றி கேட்டபோது, அவர் சுருக்கமாக “ஆம்” என்று கூறினார்.

இருப்பினும், மாநிலக் கல்வி இலாகா, இதுவரை எந்த அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையையும் வெளியிடவில்லை.

முன்னதாக, குவா முசாங், ஜெலி மற்றும் கோல கிராய் மாவட்டங்களைத் தவிர, மாநிலத்தில் பி.கே.பி. பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

அதனைத் தொடர்ந்து, இது விஷயத்தின் நம்பகத்தன்மை குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கேள்விகள் எழுந்தன.

இந்தத் தகவல்களை, ஆரம்பத்தில் தானா மேரா மாவட்டக் கல்வி அதிகாரி, நிக் முஹம்மது நிக் லிப் தனது முகநூல் பதிவில் பரப்பினார், பின்னர் மற்றச் சமூக ஊடகப் பயனர்களுக்கு அது அனுப்பப்பட்டது.

இந்த விஷயத்தை, நேற்றிரவு 11 மணியளவில், ஏப்ரல் 18 தொடங்கி, ஏப்ரல் 22 வரையில் பள்ளிகள் மூடப்படுவதை மாநிலக் கல்வி இயக்குநர் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளில் தொற்று பரவியது உட்பட, மாநிலத்தில் கோவிட் -19 நோய்த்தொற்று நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பள்ளிகளை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.