கோபிந்த் : உள்விசாரணை போதாது, எம்ஏசிசி கையாள வேண்டும்

அண்மையில், காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோர் வெளிப்படுத்திய கார்டெல் மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்குப் போலீசாரின் உள்விசாரணையினால் மட்டும் தீர்வுகாண முடியாது என்று பூச்சோங் எம்.பி. கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் குறித்த முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையைத் தொடங்குமாறு அந்த டிஏபி தலைவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைக் (எம்.ஏ.சி.சி.) கேட்டுக்கொண்டார்.

ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கத் துறையின் (ஜிப்ஸ்) சில முன்னாள் அதிகாரிகள், புலனாய்வாளர்களுக்கு “உதவி” செய்தவர்கள் மீது குற்றம் சாட்டாமல் அல்லது பதவி மாற்றம் செய்யாமல் விடுவிக்க அனுமதித்தனர் எனும் ஐ.ஜி.பி.-யை மேற்கோள் காட்டிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குப் பதிலளிக்கும் விதமாக கோபிந்த் இவ்வாறு கூறினார். கூறினார்.

ஜிப்ஸ் விசாரணைகள் பெரும்பாலும் ஒரு முட்டுச்சந்தைச் சந்தித்தன என்றும், அதன் விளைவாக, விசாரிக்கப்பட்டவர்களுக்கு எதிராக “எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும் அப்துல் ஹமீட் கூறினார்.

“எம்.ஏ.சி.சி. தலைவர் உள் விசாரணை போதுமானது என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

“அவர் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து, உடனடியாக எம்.ஏ.சி.சி. சட்டத்தின் கீழ் முழு விசாரணைக்கு உத்தரவிட்டு, தீர்க்கமாகச் செயல்பட வேண்டும்,” என்று கோபின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்) தொடர்பான கார்டெல் பிரச்சினையில் எம்.ஏ.சி.சி. தலையிட விரும்பவில்லை என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறியிருந்தார், ஏனெனில் இது அத்துறையின் உள் பிரச்சினை.

பி.டி.ஆர்.எம்.-இன் சிக்கலைச் சமாளிக்கும் திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து எம்.ஏ.சி.சி. நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், அப்துல் ஹமீட் அவர்களால் அப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

போலிஸ் படையில், அவரை வீழ்த்த விரும்பிய இளம் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு “கார்டெல்” இருப்பதை அப்துல் ஹமீட் முன்னர் வெளிப்படுத்தியிருந்தார், மேலும் அக்குழு தனிப்பட்ட இலாபத்திற்காகப் போலிஸ் படையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அப்துல் ஹமீட், தேசியக் காவல்துறைத் தலைவரானதிலிருந்து, காவல்துறையினர் 10-க்கும் குறைவான அதிகாரிகளை அடையாளம் கண்டு மாற்றியுள்ளனர் என்று கூறினார்.

இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மூத்தப் போலீஸ் அதிகாரிகளின் மாற்றத்தில் தனக்கு எந்தத் தலையீடும் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலிஸ்படை ஆணையத்தின் முடிவு என்றும் அவர் சொன்னார்.