ஷாஹிடான் : முதலீட்டாளர்கள் நுழைவதற்குச் சாதகமான கருத்தை வெளியிடுங்கள்

பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிம், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் குறித்து சாதகமான அறிக்கையை வெளியிடுமாறு நஜிப் ரசாக்கிற்கு அறிவுறுத்தினார்.

ஷாஹிடானின் கூற்றுப்படி, முன்னாள் பிரதமர் என்ற வகையில், நஜிப்பின் எதிர்மறையான பார்வை நாட்டிற்குள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளைத் தடுக்க முடியும்.

“முன்னாள் பிரதமர் (நஜிப்) அரசாங்கத்தைப் பற்றி ஒரு நேர்மறையான பார்வையை கொடுக்க வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில்.

“இல்லையெனில், முதலீட்டாளர்கள் உள்ளே வர மாட்டார்கள். நாட்டின் முன்னாள் பெரிய தலைவர்கள் அரசாங்கத்திற்கு உதவ, ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர், இன்று புத்ரா உலக வாணிக மையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.

2009 முதல் 2018 வரை நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்திய நஜிப், பி.எச். நிர்வாகம் அமைந்த போது, அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவராக மாறினார், பின்னர் தற்போது தேசியக் கூட்டணி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் அது தொடர்கிறது.

பெர்சத்துவுடன் இனி பணியாற்றுவதில்லை என்றச் கட்சியின் முடிவை ஆதரித்த அம்னோ தலைவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

இன்று, நஜிப், பொருளாதாரத்தையும், கோவிட் -19 தொற்று பரவலையும் நிர்வகிக்கத் தவறிவிட்ட தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், அம்னோவும் தேசிய முன்னணியும் இன்னும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாகக் கூறினார்.

மறுபுறம், ஷாஹிடான் பெர்சத்துவுடன் ஒத்துழைக்க விரும்பும் ஒரு தலைவராகக் காணப்படுகிறார்.

மேலும் விரிவாகக் கூறிய ஷாஹிடான், சில தரப்பினர் கூறுவதைப் போல, அரசாங்கத்தை மாற்றும் முயற்சி, கோவிட் -19 தொற்றின் விளைவாக நேர்ந்துள்ள பொருளாதார மந்தநிலையைப் புதுப்பிக்க உதவாது என்றார்.

“அரசாங்கத்தை மாற்றக் கேட்பது நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உதவாது. அரசாங்கத்தை மாற்றினால், பொருளாதாரத்தை மீட்க அதிக நேரம் எடுக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.