ஜோமோ : ஆணவத்துடன் செயல்படாமல், அண்டை நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் மேற்கத்திய வழியைப் பின்பற்றாமல், அதைக் கையாள்வதில் மிகவும் வெற்றிகரமான விளங்கும் மூன்றாம் உலக நாடுகளின் உதாரணத்தை மலேசியா பின்பற்ற வேண்டுமென பொருளாதார நிபுணர், பேராசிரியர் ஜோமோ குவாமே சுந்தரம் கூறினார்.

மலேசியா ஆணவத்துடன் இருக்கக்கூடாது என்றும், தொற்றுநோயை நிர்வகிப்பதில் அதன் அருகிலுள்ள அண்டை நாடுகளிடம் இருந்து, ஏழை நாடுகள் உட்பட, கற்றுக்கொள்வதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றும் ஜோமோ கூறினார்.

“உண்மையில், நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவும், மற்ற நாடுகளின் அனுபவத்திலிருந்து, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நுங்சாரி அகமது ராட்டி மற்றும் முகமது அப்துல் காலிட்

“வியட்நாம் நம்மைவிட மிகவும் ஏழ்மையானது, லாவோஸ் ஆசியானில் ஆக ஏழ்மையான நாடு. (ஆனால்) அவை இந்த விஷயத்தில் நம்மை விட வெற்றிகரமாக உள்ளன. காரணம் என்ன? லாவோஸ் சீனாவின் எல்லையாக இருக்கிறது (கோவிட் -19 பரவத் தொடங்கிய நாடு).

“ஒருவேளை நமது ஆணவம் ஒரு காரணமாக இருக்கலாம். மேற்குலக நாடுகளை, அவர்களின் முறையைப் பின்பற்றுகிறோம்.

“ஆகவே, என்னைப் பொறுத்தவரை, நடைமுறை நடவடிக்கை அவசியம் (தொற்றுநோயைக் கையாள்வதில்),” என, இன்று கோலாலம்பூரில், தாமு தங்கும் விடுதியில், ‘அவசரகாலப் பிரகடனமும் பொருளாதார வீழ்ச்சியும்’ எனும் தலைப்பில், அவசரகாலத்தை நிறைவு செய்ய கோரும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

ஜோமோவைத் தவிர, அப்பத்திரிகையாளர் சந்திப்பில் நுங்சாரி அகமது ராட்டி மற்றும் முகமது அப்துல் காலிட் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்களும் கலந்து கொண்டனர். இக்குழுவின் தலைவராக ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் தலைமை தாங்கினார்.

இதுவரை, வியட்நாமில் மொத்த நேர்மறை நேர்வுகளின் எண்ணிக்கை 2,785, இறப்புகள் 35 மற்றும் நோயிலிருந்து குணமடந்தவர் எண்ணிக்கை 2,475 ஆகும். லாவோஸில் மொத்தம் 58 நேர்வுகள் பதிவாகியுள்ளன, 49 நோயாளிகள் மீட்கப்பட்டதோடு, உரிரிழப்பு எதுவும் அங்குப் பதிவாகவில்லை.

வியட்நாமில் கிட்டத்தட்ட 97 மில்லியன் மக்களும், லாவோஸில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களும் உள்ளனர்.

அவற்றோடு ஒப்பிடுகையில், 32 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மலேசியாவில், இதுவரை மொத்தம் 375,054 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இதில் 1,378 இறப்புகளும் 353,822 நோயாளிகள் மீட்கப்பட்டும் உள்ளனர்.

குறிப்பிடப்பட்ட இரண்டு அண்டை நாடுகளைத் தவிர, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்றார் ஜோமோ. அவை மலேசியா போன்ற நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (பி.கே.பி.) செயல்படுத்தவில்லை என்றாலும் கோவிட் -19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அவற்றால் முடிந்தது.

தென் கொரியாவில் கோவிட்-19 சோதனை

தென் கொரியாவில், தொற்றுநோயின் ஆரம்பக் கட்டத் தாக்குதலின்போது நடத்தப்பட்ட தீவிரமான சோதனைகளைப் பற்றியும் ஜோமோ பேசினார்.

அதுமட்டுமின்றி, 2020 புள்ளிவிவரங்களின்படி, இந்தக் கிழக்கு ஆசிய நாடுகளால் பொருளாதார வளர்ச்சியையும் பதிவு செய்ய முடிந்தது, முழு உலகமும் கோவிட் -19 கொண்டுவந்த பொருளாதாரத் தாக்கத்தால் முடங்கிக் கிடந்தபோது.

கிழக்கு ஆசிய நாடுகளும் வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தும் பிகேபி-யை நடைமுறை பயன்படுத்தவில்லை, ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று ஜோமோ கூறினார்.

அதே நேரத்தில், மலேசியாவில் தொற்றின் பாதிப்பு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போல மோசமாக இல்லை என்பதையும் ஜோமோ ஒப்புக் கொண்டார், ஆனால் தொற்றுநோய் நிர்வாகத்தில் மேம்பாடுகள் செய்யப்படலாம் என்று நினைப்பதாக அவர் சொன்னார்.

“நாம் தொடர வேண்டிய நல்ல அம்சங்கள் உள்ளன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலக்கை அடையாத பல அம்சங்களும் உள்ளன,” என்று அவர் கூறினார்.