ம.இ.கா.-உடன் இணைந்து செயல்பட முடியாது என்றத் தேசிய முன்னணி (பி.என்.) நட்பு கட்சியான மலேசியா இந்தியர் மேம்பாட்டு முன்னணியின் (ஐ.பி.எஃப்) முடிவு, அடுத்தப் பொதுத் தேர்தலில் அக்கட்சியின் போராட்டத்தைப் பாதிக்காது.
பி.என். கூட்டணியின் ஓர் அங்கமான ம.இ.கா.விற்கு ஆதரவளிக்க முடியாது என்று ஐ.பி.எஃப். முடிவு செய்தால், அதனால் ம.இ.கா. எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளாது என்று ம.இ.கா. தகவல் பிரிவுத் தலைவர் வி குணளான் கூறினார்.
“ஆதரவு இல்லை, எந்தப் பிரச்சனையும் இல்லை. ஐபிஎஃப் சொந்த பலம் கொண்ட ஒரு கட்சியும் அல்ல.
“பிரச்சினை என்னவென்றால், கட்சியின் உயர்மட்ட தலைமை மட்டுமே ம.இ.கா.-உடனான ஒத்துழைப்பை நிராகரிக்க முயற்சிக்கிறது. ஆனால், கட்சியின் அடிமட்ட மக்கள் இன்னும் ம.இ.கா.-உடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளனர்.
“எனவே, அடிமட்டத்தின் ஆதரவு இல்லாதத் தலைமையின் எந்தவொரு முடிவைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. கட்சியே மூன்று அல்லது நான்கு முகாம்களாகப் பிரிந்து கிடக்கிறது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், சில பி.என். நட்பு கட்சிகளைத் “துரோகிகள்” என்று முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, அக்கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என ஐ.பி.எஃப். அறிவித்தது. அதுகுறித்து கருத்து தெரிவித்தபோது குணாளன் இவ்வாறு கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில், மஇகாவின் 74-ஆவது ஆண்டு பொதுக் கூட்டதின்போது, விக்னேஸ்வரன் தனது உரையில் தனது கட்சி கடந்த ஜி.இ.-யில் பல பி.என். நட்பு கட்சிகளால் துரோகம் இழைக்கப்பட்டதாகக் கூறினார்.
கடந்தப் பொதுத் தேர்தலில், ம.இ.கா. வேட்பாளர்களைப் புறக்கணித்ததாகக் கூறும் பல பி.என்-நட்பு கட்சிகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டிருக்கும் அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, ஐ.பி.எஃப் தலைவர் டி.லோகநாதன், ம.இ.கா. உடனான ஒத்துழைப்பை நிராகரிக்க கட்சியின் உச்ச மன்றம் முடிவெடுத்ததாகவும், ஆனால் மற்ற இரண்டு பி.என். உறுப்பு கட்சிகளான அம்னோ மற்றும் மசீச-உடனான உறவு தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பி.என். உறுப்பினராக விரும்பும் முன், கட்சியின் உள்பிரச்சினைகளில் ஐ.பி.எஃப். கவனம் செலுத்த வேண்டும் என்று குணளான் கூறினார்.
“ரோஸ்- உடன் (சங்கங்களின் பதிவுத் துறை) கட்சிக்கு இன்னும் பல சிக்கல்கள் இருப்பதாக வதந்திகள் உள்ளன, தலைவரின் பெயர் கூட இன்னும் மாற்றப்படவில்லை.
“பி.என்.-இல் ஓர் அங்கமாக விண்ணப்பிப்பதற்கு முன்னர், அவர்கள் ரோஸுடன் உள்ள பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
பதிவைப் பொறுத்தவரை, ஐபிஎஃப் பிஎன்-நட்பு கட்சியாக கருதப்படுகிறது, ஐ.பி.எஃப். பி.என். கூட்டணியில் இணைவதை ம.இ.கா. பல ஆண்டுகளாக எதிர்த்து வருகின்றது.
தற்போது, பி.என். கூட்டணியில் அம்னோ, ம.இ.கா., மசீச மற்றும் பிபிஆர்எஸ் உள்ளிட்ட நான்கு உறுப்புக் கட்சிகள் உள்ளன.