போலிசாரால் தாக்கப்பட்டு, ஐ.சி.யு.-வில் இருந்தவர் மரணம்

காவலில் இருந்தபோது, கால் துண்டிக்கப்படும் அளவிற்குக் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர், நேற்று முன்தினம், செலாயாங் மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார்.

கடந்த மார்ச் 8-ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது சகோதரர் கணபதி (40) இறந்ததை, மருத்துவமனை உறுதிப்படுத்தியதாக அவரது சகோதரி ஏ தங்கமலர் (41) தெரிவித்தார்.

“எனது சகோதரர் நேற்று இரவு 10.55 மணிக்கு இறந்தார். மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

“பிரேதப் பரிசோதனை நாளை நடத்தப்படும்,” என்று மலேசியாகினியிடம் அவர் கூறினார்.

முன்னதாக, இறந்தவரின் தாயார் எஸ் தனலெட்சுமி, 60, மார்ச் 11 அன்று, காவலில் இருந்தபோது தனது மகன் கால் துண்டிக்கப்படும் அளவிற்குத் தாக்கப்பட்டதாகக் கூறி,  கோம்பாக் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில், தனலட்சுமி தனது மகன் பிப்ரவரி 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.

அந்த அறிக்கையின்படி, நீரிழிவு நோய் மற்றும் இதயப் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவரது மகன் தடுத்து வைக்கப்பட்டபோது நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர், நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளைக் கொண்டு வருமாறு போலிசார் அவரது மகளை அழைத்தனர் என்றும், காவல்நிலையத்திற்கு மருந்து கொண்டு சென்றபோது தனது சகோதரரைப் பார்க்க அவரை அனுமதிக்கவில்லை என்றும் தனலட்சுமி கூறியிருந்தார்.

மார்ச் 8-ம் தேதி, கணபதி விடுவிக்கப்பட்டு செலாயாங் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சார்ஜெண்டிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

காவலில் இருந்தபோது, ஒரு இரப்பர் குழாயால் போலீசார் தன்னைத் தாக்கியதாக தனது மகன் சொன்னதாக தனலட்சுமி கூறியுள்ளார்.

மருத்துவமனையில், கணபதிக்குச் சிறுநீரகப் பிரச்சினைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் அவரது கால் துண்டிக்கப்பட வேண்டியிருந்தது.

தாக்கப்பட்டதால் இறந்தவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினர். தாக்கப்பட்டதன் விளைவாக இறந்தவரின் கால்கள் வீங்கி, காயமடைந்துள்ளதைக் கண்டதாகவும் அவர்கள் கூறினர்.

ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான கணபதி, பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

தொடர்பு கொண்டபோது, ​​பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காவல்துறை காத்திருக்கிறது என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

“ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“நாங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த மார்ச் 12-ம் தேதி, தனது தரப்பு இந்த வழக்கை விரிவான விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அரிஃபாய் மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்கிடையில், இறந்தவர் குடும்பத்தின் வழக்கறிஞரான கே கணேஷ்-ஐ தொடர்பு கொண்டபோது, ​​இந்த வழக்கில் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படாத நிலையில், காவல்நிலையத் தலைவரை இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

“ஒரு சிலரின் பொறுப்பற்ற தன்மையால் கணபதி குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.

“காவல்நிலையத் தலைவருக்கு, அவரது நிலையத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது அவரின் அலட்சியப் போக்கை தெளிவாகக் காட்டுகிறது.

“அவர் இராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை கொலை என வகைப்படுத்தி மீண்டும் விசாரணை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இன்று வரை ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கணேஷ் கேள்வி எழுப்பினார்.

“தான் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக, கணபதி அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்,” என்று அவர் கூறினார்.