மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி : திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே

வேலை, மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்கான மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே வழங்கப்படும் என்று காவல்துறையின் துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய மாநிலங்களில், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படாது என்றார் அவர்.

“அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்.), கடந்த நான்கு நாட்களில் புதியக் கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பதைத் தீவிரமாக கருதுகிறது. தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைப் பி.டி.ஆர்.எம். கடைபிடிக்கும்.

“இதில் அவசரநிலைகள், இறப்புகள் மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணைவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அடங்கவில்லை,” என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவசரம் மற்றும் இறப்பு நோக்கங்களுக்காக, மாநில எல்லைகளைக் கடக்க, நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள், அதாவது பெற்றோர், குழந்தைகள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அக்ரில் சானி கூறினார்.

திருமண விருந்துகளில் கலந்துகொள்வது மற்றும் வேறு எந்த வகையான நிகழ்ச்சிகளுக்கும் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி இல்லை என்றார் அவர்.

“நோன்புப் பெருநாள் முடியும் வரையில் இது தொடரும், இவ்விதிகளுக்குக் கீழ்ப்படியாத எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

ரமடான் சந்தை மற்றும் இரவு சந்தைகளுக்கு வருபவர்கள், செந்தர இயங்குதல்  நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்காதது குறித்து கருத்து தெரிவித்த அக்ரில் சானி, அனைத்து மாவட்டக் காவல்துறைத் தலைவர்களும் எஸ்ஓபி கண்காணிப்புக் குழுக்களும், கண்காணிப்பு நடத்த அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்படுவார்கள் என்றார்.

“எஸ்ஓபி-க்களுக்கு இணங்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிக நடவடிக்கைகளை நிறுத்த, பி.டி.ஆர்.எம். உள்ளூராட்சி மன்றத்திற்குப் பரிந்துரைக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

  • பெர்னாமா