மஸ்லி : கல்வி நிறுவனங்கள் தொடர்பான திரளைகளை விரிவாகக் கூறுங்கள்

இந்த அதிநவீனக் கல்வி நிறுவனத்தில், கோவிட் -19 நோய்த்தொற்றின் வீதம் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு, முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அரசாங்கத்திடம் கோரினார்.

பள்ளிகள், பாலிடெக்னிக்ஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (ஐபிஜி), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இப்போது ஆபத்தான தொற்றுநோய் பாதிக்கப்படக்கூடிய எந்தத் திரளைகள் உள்ளன என்பதை அறிய மக்கள் விரும்புவதாக மஸ்லி தெரிவித்தார்.

“தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை மக்கள் பொதுவாக பாராட்டுகிறார்கள்.

“இருப்பினும், கல்வி நிறுவனங்கள் எந்தத் திரளையை உள்ளடக்கியது என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மஸ்லீயின் கூற்றுப்படி, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சமீபத்திய சூழ்நிலையில் அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.

“இது பொதுமக்களுக்கு விளக்கப்பட வேண்டும், ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

“ஏனெனில், இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுவாக சமூக உறுப்பினர்களிடமும் கவலையை ஏற்படுத்துகிறது.

“எனவே, கல்வியமைச்சும் உயர்க்கல்வி அமைச்சும் விளக்கத்தை வழங்க முன்வர வேண்டும்.

“மக்கள் முதிர்ச்சியடைந்துள்ளனர், எனவே தகவல்களை வெளிப்படையாகக் கற்றுக்கொள்வதற்கும் பகிர்ந்துகொள்வதற்குமான அணுகுமுறை மிகவும் முக்கியமானது. எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சரியான விளக்கத்தை வழங்க முன்வர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, புதியக் கோவிட் -19 நோய்த்தொற்று வழக்குகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநிலத்தின் சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும், இன்று தொடங்கி 14 நாட்களுக்கு மூடுமாறு சரவாக் அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் கல்வி நிறுவனங்களையும், ஏப்ரல் 24-ஆம் தேதி வரை மூடுமாறு கிளந்தான் மாநிலக் கல்வி இலாகா நேற்று உத்தரவிட்டது.