ஆறுமுகத்தின் இரண்டாவது அவதூறு வழக்கு முடிவுக்கு வந்தது!

மலேசிய நண்பன் நாளிதழ் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் இரண்டு அவதூறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தார். இரண்டாவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (19.4.2021) கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அக்தார் பின் தகிர் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு முன்பாக ஒரு சுமூகமான ஒப்புதல் தீர்ப்புக்கு (consent judgement) இரு தரப்பினரும் இணக்கம் கண்டதால், அந்தத் தீர்ப்பை நீதிபதியின் முன் பதிவு செய்யப்பட்டதாக வழக்கறிஞர் தினகரன் பத்துமலை தெரிவித்தார். பிரதிவாதியின் சார்பாக வழக்கறிஞர் டினேஷ் ஆதி நாராயணன் ஆஜரானார்.

2016-இல் மலேசிய நண்பன் வெளியிட்ட ஒரு செய்தியானது அவதூறானது என்று ரிம 10 இலட்சம் கோரி ஆறுமுகம் தனது அந்த இரண்டாவது வழக்கை 2019-இல் பதிவு செய்திருந்தார்.

இதற்கு முன்பாக 2012-இல் மலேசிய நண்பன் வெளியிட்ட செய்திகள் அவதூறானவை என்று ஆறுமுகம் தொடுத்த முதல் வழக்குக்குப் பிரதிவாதிகள் ரிம 580,000 வழங்க வேண்டும் என உயர் நீதி மன்றம் 2020-இல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முதல் இரண்டு பிரதிவாதிகள் மட்டும் மேல்முறையீடு செய்துள்ளனர்.