2 வாரங்களில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கோவிட் -19 தொற்று

கிளந்தானில், கோவிட் -19 தொற்று கண்ட 464 பேரில், 259 அல்லது 56 விழுக்காடினர் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் என்று மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி ஹுசின் தெரிவித்தார்.

மீதமுள்ளவர்கள் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஆவர்.

ஏப்ரல் 3 முதல் 16 வரையில், இரண்டு வார காலப்பகுதியில் நடத்தப்பட்ட கோவிட் -19 சோதனையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை விளக்கிய ஜெய்னி, மொத்தம் 111 பேர் அல்லது நேர்மறை சோதனை செய்த 24 விழுக்காட்டினர் ஏழு முதல் 12 வயதுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் என்று கூறினார்.

“ஏழு வயதுக்கும் குறைவான குழந்தைகள் எட்டு பேர் (2 விழுக்காடு) உள்ளனர், 86 பேர் (19 விழுக்காடு) 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் (ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட).

“464 நேர்வுகளில், கோத்தா பாரு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான 189 நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து தும்பாட் (113), தானா மேரா (55), பாசீர் (36), மாச்சாங் (20), பாச்சோக் (17), பாசீர் பூத்தே (15), கோல கிராய். (8), ஜெலி (7) மற்றும் குவா முசாங் (4),” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜெய்னி, பல்வேறு காரணங்களால் பள்ளிகளில், குறிப்பாக விடுதிகளில் தொற்று விரைவாக பரவியுள்ளது என்று ஆய்வின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

“சில பள்ளிகள் எஸ்.ஓ.பி.க்களை முறையாகப் பின்பற்றத் தவறியதும் தொற்றுநோய்கள் பரவ காரணமாக அமைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

புதிய திரளைகள் பதிவாகியுள்ள தற்போதைய நிலைமையின் அடிப்படையில், இந்த வாரம் புதிய நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையில் உயரால் என்று கிளந்தான் சுகாதாரத் துறை எதிர்பார்ப்பதாகவும் அவர் விளக்கினார்.

  • பெர்னாமா