அகோங்கை எதிர்கொள்ள அனுமதி கேட்டு, மகாதீரும் மாட் சாபுவும் அரண்மனைக்குச் சென்றனர்

யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் ஆஜராக அனுமதி பெற, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவும் அமானா தலைவர் மொஹமட் சாபுவும் இன்று இஸ்தானா நெகாராவுக்குச் சென்றனர்.

பிரதமர் முஹைதீன் யாசின் அறிவுறுத்திய அவசரநிலையை உடனடியாக நிறுத்துமாறு, மாமன்னருக்குக் கோரிக்கை விடுக்க இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

அவசரகால நிறைவுக் குழுவின் தலைவரான காலிட் சமாடுடன் அரண்மனைக்குச் சென்ற அவர்கள், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுக்கு, அனுப்பி, அவசரகாலத்தை நிறைவு செய்ய வலியுறுத்து ஒரு குறிப்புடன், இரண்டாவது விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

இந்தக் கடிதத்தை, அகோங்கின் மூத்தத் தனிச்செயலாளர் கர்னல் நஸிம் மொஹமட் ஆலிம் பிற்பகல் 3.30 மணியளவில் பெற்றார்.

மாலை 3.15 மணியளவில், அரண்மனை வாயிலுக்குள் அவர்கள் நுழைந்தனர், அரை மணி நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து புறப்படுவதைக் காண முடிந்தது.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது, அரண்மனை வாயிலின் முற்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவாளர்கள் நிறைந்திருந்தனர்.

அரண்மனை வாயிலில் நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ் குழுவும் அங்கு இருந்தது.

பெஜுவாங், டிஏபி, பி.கே.ஆர்., முடா, மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவாளர்கள் அங்குக் கூடியிருந்தனர்.

மாலை 3.45 மணியளவில் மகாதீர், முகமது மற்றும் காலிட் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய காலிட், யாங் டி-பெர்டுவான் அகோங் முன் ஆஜராகும் விண்ணப்பம் பரிசீலிக்கப்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மன்னரை எதிர்கொள்ளும் விண்ணப்பத்திற்கான இரண்டாவது முயற்சிக்கு அரண்மனையிலிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால், அவசரகாலத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு இன்னும் உறுதியான ஆதாரங்களுடன், அடுத்த விண்ணப்பம் செய்ய அவரது குழு மீண்டும் அங்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, அவர்கள் ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் வரை காத்திருப்பார்கள் என்றும் காலித் கூறினார்.

“நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால், அகோங் எங்களை எதிர்கொள்ள ஒப்புக்கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

அமானாவின் தகவல் தொடர்பு இயக்குநரின் கூற்றுப்படி, அவசரகால அறிவிப்பு பல்வேறு கோணங்களில், குறிப்பாகப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

“அவசரகால நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றம் வழக்கம் போல் அமர அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்,” என்று அவர் கூறினார்.

மன்னரை எதிர்கொள்ள, முதல் விண்ணப்பக் கடிதம் கடந்த ஆண்டு மார்ச் 26 அன்று சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்தானா நெகாரா வளாகத்தில், பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீருடன் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அவர்களில், பெஜூவாங்கைச் சேர்ந்த மர்சுகி யஹ்யா, அமிருதீன் ஹம்சா, கைருதீன் அபு ஹசான், உல்யா அகமா ஹுசமுடின்; பி.கே.ஆரைச் சேர்ந்த தியான் சுவா, மரியா சின் அப்துல்லா, பாஹ்மி ஃபட்ஸில்; டிஏபியைச் சேர்ந்த ஹன்னா இயோ, லிம் லிப் எங், தெரசா கோக் ஆகியோரும் அதில் அடங்குவர்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் போர்ட்டிக்சனில் இருந்ததால் அவர் அங்கு வரவில்லை.