`தலைவரும் துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்வு`, தீர்மானத்திற்குக் கெடா ம.இ.கா ஆதரவு

ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் எம் சரவணனும் கட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வுபெற வேண்டும் என்றத் தீர்மானத்தைக் கெடா ம.இ.கா. ஏகமனதாக ஆதரித்தது.

கெடா ம.இ.கா. தொடர்புகுழு தலைவர் எஸ் ஆனந்தன், நேற்று பெக்கன் செர்டாங் ம.இ.கா. கிளை பொதுக் கூட்டத்தில் அந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்தார்.

“இதுவரை, இந்தத் தீர்மானத்தை நேற்று முதல் தங்கள் ஆண்டு பொதுக் கூட்டங்களை நடத்திய அனைத்து கிளைகளும் ஒருமனதாக ஆதரித்தன.

“மே 5 வரை நடைபெறவிருக்கும் கிளைகளின் வருடாந்திர கூட்டத்தில், கெடாவில் உள்ள அனைத்து 336 கிளைகளும் இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

“நாட்டில், இந்தியச் சமூகத்தை உயர்ந்த பாதைக்கு இட்டுச் செல்ல, ம.இ.கா.வுக்குத் திறமையான மற்றும் குரல் எழுப்பக்கூடியத் தலைமைத்துவம் தேவை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இந்த மே மாதத்தில், தலைவர் மற்றும் பிற முக்கியப் பதவிகளுக்கான ம.இ.கா. கட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் கட்சியில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இரண்டு மேலவை உறுப்பினர்கள் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.