பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, பினாங்கு ஸாகாட் மேலாண்மை மையத்தின் இரமலான் உதவி தொடர்பான இடுகையைத் தனது முகநூல் பதிவிலிருந்து நீக்கியுள்ளார்.
இஸ்லாம் அல்லாத அவர் ஏன் ஸாகாட் மேலாண்மை மையத்தின் உதவிகளை விநியோகிக்கிறார் என்று கேள்வி எழுப்பி, சமூக ஊடகங்களில் அவர் “தாக்கப்பட்டார்”.
“நான் இனம், மதம் மற்றும் அரசியல் கொள்கைகளைப் பொருட்படுத்தாமல் அனைவருக்குமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி.
“தீவிரவாத மத வெறியர்களால், எனக்கும் என் அலுவலகத்திற்கும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது, துரதிர்ஷ்டவசமாக ஸாகாட் மேலாண்மை மையமும் மறைமுகமாகத் தாக்கப்பட்டுள்ளது.
“எனவே, எங்கள் அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்ட அனைத்து ஸாகாட் மேலாண்மை மையத்தின் உதவி தொடர்பான முகநூல் பதிவுகளையும் நான் நீக்கிவிட்டேன்,” என்று கஸ்தூரி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
60 ஆண்டுகளுக்கு மேலாகியும், மோசமான, புண்படுத்தும், இனவெறி மற்றும் பாலியல் சொற்களைப் பயன்படுத்தும் குழுக்களின் இலக்காக மலேசியர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார் அவர்.
“சில நாட்களுக்கு முன்பு, நான் உதவி செய்தேன், நான் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன், மசூதிக்குச் சென்றேன், அவை என்னிடமிருந்து வந்தவை அல்ல, ஸாகாட் மேலாண்மை மையத்திலிருந்து வந்தது.
“சில தரப்பினர் என்னை இனவெறி கொண்டு தாக்கத் தொடங்கியதால், இந்தப் பிரச்சினை நேற்று எழுந்தது, ஒரு முஸ்லீம் அல்லாத நான், எவ்வாறு ஸாகாட் மேலாண்மை மையத்தின் உதவிகளை வழங்கினேன் என்று வெறித்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கேள்வி எழுப்பினர்,” என்று அவர் கூறினார்.
தேவைப்படும் குடும்பங்களுக்கும், உதவி கேட்டு விண்ணப்பிக்க தனது அலுவலகத்திற்கு வந்தவர்களுக்கும், விரைவில் உதவி வழங்கப்படுவதை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தனக்கு இல்லை என்று அவர் கூறினார்.
அண்மையில், புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் என்பவரும், ஏழைகளுக்கு உதவப் பல தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சமூக வலைத்தளங்களில் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

























