‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா?’ – மூடா ஆர்வலர் கேள்வி

இரண்டு மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.எம். தேர்வுக்கு அமர்ந்த ஒரு மாணவர் ஆர்வலர், நாட்டைத் தாக்கிவரும் தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்த ஆண்டு படிவம் 5 மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

18 வயதான நூருல் ரிஃபயா முஹம்மது இக்பால், இந்த ஆண்டு எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடும் சம்பவம் நிகழுமா என்று கேள்வி எழுப்பினார்.

“2021-ஆம் ஆண்டில், எஸ்பிஎம் தேர்வுக்கு அமர, இன்னும் பல மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கருத்தில் கொண்டுள்ளார்களா என்று கல்வி அமைச்சிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

“அவர்களில் சிலர் கோவிட் தொற்று பரவிய காலத்தில், பள்ளி செல்ல ஆவலுடன் இருந்தனர், இன்னும் அவர்கள் எஸ்பிஎம்-ஐ எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

“ஒரு நாள் பள்ளிக்குச் சென்ற அவர்கள், ​​மறுநாள் வீட்டில் மாட்டிக்கொண்டனர். மீண்டும், நாம் எதை நோக்கி செல்கிறோம்?” என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

27 கோவிட் -19 நேர்வுகள் கண்டறியப்பட்ட பின்னர், சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் 19 பள்ளிகள் மூடப்பட்டிருப்பது குறித்து நூருல் ரிஃபயா கருத்து தெரிவித்தார்.

கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்யும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டு, வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலைச் செயல்படுத்தும் என்று கல்வி அமைச்சு நேற்று (ஏப்ரல் 21) உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஆண்டு, வீட்டு கற்றல் முறைகளை அமல்படுத்தியது, மாணவர்களிடையே கல்வி இடைவெளியை உருவாக்கியது என்று இகாத்தான் டெமோக்ராடிக் மலேசியாவின் (மூடா) நிர்வாகக் குழு உறுப்பினரான நூருல் ரிஃபயா கூறினார்.

“2021எஸ்பிஎம் மாணவர்கள், தங்களின் 4-ஆம் படிவத்தை முழுமையாக வீட்டிலேயே பூர்த்தி செய்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“அதிர்ஷ்டம் உள்ள மாணவர்கள், இயங்கலையில் வகுப்புகளை எடுக்கலாம், அதே நேரத்தில் இணைய இணைப்பு அல்லது இயங்கலை வகுப்புகளில் கலந்துகொள்ள ஏற்ற சாதனங்கள் இல்லாமல், வீட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியில் அதிக முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 2020 எஸ்பிஎம் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்றும் நூருல் ரிஃபயா கேட்டார்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு படிவம் 5 மாணவர்கள் இந்த ஆண்டு பிப்ரவரியில் எஸ்.பி.எம். தேர்வை எழுதினர்.

எஸ்பிஎம் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்த போதிலும், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நூருல் ரிஃபயா கூறினார்.

“அவர்கள் (எஸ்பிஎம் 2020 மாணவர்கள்) மீண்டும் எப்போது படிப்பைத் தொடர முடியும்? நீங்கள் அவர்களின் நேரத்தை நிச்சயமற்ற நிலையில் வீணடிக்கிறீர்கள்,” என்று அவர் முறையிட்டார்.