கோவிட் -19 தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய, 2021 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், RM3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போது, தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கம் தேசிய அறக்கட்டளை நிதியை ஏன் பயன்படுத்துகிறது என்று கிள்ளான் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தடுப்பூசிக்கான கூடுதல் நிதியா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று சார்லஸ் கூறினார்.
“பொது நலனுக்காக, அரசாங்க நிதியைச் செலவழிப்பதில் பிரதமர் முஹைதீன் யாசின் திறந்த நிலையில், பொறுப்புடனும் வெளிப்படையுடனும் இருக்க வேண்டும்.
“செலவின விவரங்களை மக்கள் பார்க்கட்டும்,” என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகளை வாங்கும் நோக்கில், நேற்று தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது.
தேசிய அறக்கட்டளை நிதிச் சட்டம் 1988-ல் (KWAN) திருத்தங்கள் செய்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களவை ஒப்புதல் இதற்கு தேவை எனினும், தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ளதால், எந்தவொரு முடிவையும் எடுக்க புத்ராஜெயாவுக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த சில தசாப்தங்களாகத், தேசிய அறக்கட்டளை நிதி திரட்டப்பட்டது, இதில் பெரும்பகுதி தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸின் பங்களிப்பாகும்.
“இந்த நிதிகள் எதிர்காலத்திற்காக ஒதுக்கப்பட்டவை, இப்போது அவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்?
“அரசாங்கம் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கிறதா, அதனால் எதிர்காலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டுமா?” என்று அவர் கேட்டார்.
2020-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய அறக்கட்டளை நிதி அறிக்கை 2018-இன் படி, இந்த நிதியில் மொத்தம் RM17.4 பில்லியன் உள்ளது.
புத்ராஜெயா, நாட்டின் நிதி வளத்தைச் செலவழிக்க, தனது அவசரகால அதிகாரங்களை எந்த அளவுக்குப் பயனபடுத்த விரும்புகிறது என்றும் சார்லஸ் கேள்வி எழுப்பினார்.
டிஏபி எம்.பி.யான அவர், அரசாங்கம் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தி, கூடுதல் பொருட்கள் அல்லது பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
கடந்த மாதம், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, கூடுதல் நிதி திரட்டிய புத்ராஜெயா, திரட்டப்பட்ட நிதியை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி பயன்படுத்தவும் செய்தது.