அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி

கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழான 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு, RM500 சிறப்பு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது.

இது அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளுக்கான தயாரிப்புகளுக்கு உதவும்.

“சேவை ஒப்பந்தம், சேவைக்கான ஒப்பந்தம் (Contract Of Service, Contract For Service), பகுதி நேர தினசரி அலுவலர்கள், மைஸ்தெப் (MySTEP) கீழ் நியமனம் பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு RM250 வழங்கப்படும்.

“இந்த மானியம் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் அரசு ஊழியர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களைப் பாராட்டுவதற்காகும், குறிப்பாக நாடு இந்தச் சவால் மிக்க காலகட்டத்தில் இருக்கும்போது.

இந்தச் சிறப்பு உதவிநிதி மே 6-ஆம் தேதி, மே மாதச் சம்பளத்துடன் சேர்ந்து வழங்கப்படும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தச் சிறப்பு உதவிநிதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நிதிச் சுமையை எளிதாக்கும் என்றும், அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஊக்குவிப்பாக அமையும் என்றும் அரசாங்கம் நம்புகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.