100 ரிங்கிட்டை என்ன  செய்லாம் ?

இராகவன் கருப்பையா- “நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பிரத்தியேகமான ஒரு அறிவிப்பை செய்யவிருக்கிறேன்,” என சுமார் ஒரு வாரத்திற்கு முன் பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு ஒட்டு மொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

எம்மாதிரியானத் திட்டங்களை அவர் அறிவிக்கப் போகிறார் என நாம் எல்லாருமே மிகுந்த ஆர்வத்துடன் ஆவலோடு காத்திருந்தது ஏதோ உண்மைதான்.

ஆனால் அவர் அறிவித்தத் திட்டங்கள் வெகுசன மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையாததால் கடைசியில் அது வெறும் ‘புஸ்வானமாக’வே முடிந்தது.

இதர பல சலுகைகளோடு, 18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படும் என அன்வார் செய்த அறிவிப்பு மேலும் அதிகமான கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

ஒரு வீட்டில் 18 வயதிற்கும் மேல் 4 பேர்கள் இருந்தால் அந்த குடும்பத்திற்கு மொத்தம் 400 ரிங்கிட் கிடைக்கும் என அவர் சமாதானம் கூற முற்படுகிற போதிலும் பெரும்பாலோருக்கு அந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றே தெரிகிறது.

பதினெட்டு வயதிற்கும் மேற்பட்ட 4 பேர்களைக் கொண்ட ஒரு குடும்பம் அவ்வளவாக பண சிக்கலில் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பள்ளி செல்லும் பிள்ளைகளுடன் தனித்து வாழும் ஒரு தாயின் நிலை என்ன, எனும் கேள்வி எழுவதில் நியாயம் உண்டு.

எனவே வறுமையில் வாடும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இந்த 100 ரிங்கிட் எவ்வகையில் உதவும் என்று தெரியவில்லை. உச்சத்தைத் தொட்டுள்ள வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்க இந்தத் தொகை போதுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாட்டிலுள்ள எண்ணற்ற கோடீஸ்வரர்களும் லட்சாதிபதிகளும் உள்பட, 18 வயதிற்கும் மேற்பட்ட சுமார் 22 மில்லியன் பேர்களுக்கு சகட்டு மேனிக்கும் தலா 100 ரிங்கிட் வழங்குவது வேடிக்கையாக உள்ளது.

மாறாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சற்று அதிகமானத் தொகை வழங்கும் வழிமுறை ஒன்றை அரசாங்கம் வகுத்திருக்க வேண்டும்.

நாட்டிலுள்ள 10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு தற்சமயத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது மற்றொரு சலுகை. ஆனால் எத்தனை பேர்கள் இதனைக் கேட்டு ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்கள் என்று தெரியாது.

“ஆட்சியைக் கைப்பற்றினால் மறுநாளே டோல் கட்டண வசூலிப்பு நிறுத்தப்படும்,” என தேர்தல் பிரச்சாரங்களின் போது அன்வார் சூளுரைத்ததுதான் மக்கள் மனங்களில் இன்னமும் ரீங்காரமிடுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் அன்வார் சிறையில் இருந்த போது, மகாதீர் தலைமையில் அமைந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங், நாடு தழுவிய நிலையில் டோல் கட்டண வசூலிப்பில் 18% கழிவு வழங்கியது இன்னமும் நடப்பில் உள்ளதை மக்கள் நினைவு கூறுகின்றனர்.

பெட்ரோல் விலை குறையும் என்பது நல்ல செய்திதான் எனும் போதிலும் லிட்டர் ஒன்றுக்கு 6 காசுகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு எத்தனை பேர்களை மகிழ்ச்சிபடுத்தியிருக்கும் என்று தெரியாது.

இது குறித்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரஃபிடா அஸிஸ், வாக்காளர்களை கவருவதற்காக மட்டுமே அறிவிப்புகளை செய்யாமல், நேர்மையாக, நாணயத்தோடு, பொறுப்புடன் மக்களுக்கு சேவையாற்றினாலே போதும் என சற்று கடுமையாகச் சாடினார்.

இதற்கிடையே தற்போது தாம் எதிர்நோக்கியிருக்கும் 2 பெரிய சவால்களிலிருந்து பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அவசர அவசரமாக இத்திட்டங்களை அன்வார் அறிவித்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள கருத்துரைத்துள்ளனர்.

நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக அவர் செய்த சில முடிவுகள் குறித்து பொது மக்கள் இன்னமும் விவாதித்த வண்ணமாகத்தான் உள்ளனர்.

மற்றொரு விவகாரம், எதிர்வரும் 26ஆம் தேதியன்று அவருக்கு எதிராக தலைநகரில் நடைபெறவுள்ள ‘தூருன் அன்வார்'(அன்வார் பதவி விலக வேண்டும்) என்றொரு மாபெரும் பேரணியாகும்.