கோவிட் -19 : நெருங்கிய தொடர்புகொண்ட ஆசிரியர்களுக்கு உடனடி தனிமைப்படுத்துதல் விடுப்பு – என்.யு.டி.பி.

கோவிட் -19 நேர்மறை வழக்குகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட ஆசிரியர்களுக்கு, மாவட்டச் சுகாதார அலுவலகத்தின் (பி.கே.டி.) தனிமைப்படுத்துதல் கடிதத்திற்காகக் காத்திருக்காமல், தனிமைப்படுத்தும் விடுப்பு வழங்குமாறு தீபகற்ப மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைத் தொழிற்சங்கம் (என்.யு.டி.பி) கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது.

என்.யு.டி.பி. தலைமைச் செயலாளர் ஹாரி தான் ஹுவாட் ஹோக் கூறுகையில், கடிதம் கிடைக்க நேரம் எடுக்கும் என்பதால், ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு விடுப்பு ஒதுக்கீடு (சி.ஆர்.கே.) போதுமானதாக இல்லை என்றார்.

“அனைவருக்கும் தெரியும், கோவிட் -19 வைரஸ் பரவல் நம் நாட்டில் அதிகரித்துள்ளது, மேலும் அதிகமான நபர்கள் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் பி.கே.டி.-யிலிருந்து தனிமைப்படுத்துதலுக்கான கடிதத்தைப் பெற நீண்ட நேரம் எடுக்கும்.

“ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு விடுப்பு ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

“இந்த நிலைமையின் காரணமாக, கோவிட் -19 நேர்மறை வழக்கோடு நெருங்கியத் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், கோவிட் -19 தொற்று, பள்ளி மாணவர்களிடையே விரைவாகப் பரவக்கூடும், மேலும் குறைந்த நோய் தடுப்பாற்றல் கொண்ட மாணவர்களைச் சட்டென தாக்கும் வல்லமை கொண்டது.

எனவே, கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின், இந்த விஷயத்தை ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உதவ சிறந்த வழியை வகுக்க முடியும் என்று என்.யு.டி.பி. நம்புகிறது என்று தான் கூறினார்.

“தனிமைப்படுத்துதல் விடுப்பு வழங்கப்படும் ஆசிரியர்கள் பி.டி.பி.ஆர் ‘முடக்கலை’ -இல் (offline) நடத்தலாம், அதாவது கற்பித்தல் பதிவுகளை உருவாக்கி மாணவர்களுக்கு அனுப்பினால், மாணவர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களின் கற்றலைத் தொடரலாம்,” என்று அவர் கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில், இடைநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் தாஃபிஸ் மையங்கள் மற்றும் மதரஸாக்கள் சம்பந்தப்பட்ட 26 திரளைகள் புகாரளிக்கப்பட்டிருப்பதாக நேற்று சுகாதார அமைச்சு அறிவித்தது.

பள்ளிகளில் அதிகரித்து வரும் நேர்மறையான வழக்குகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னர், பள்ளி அமர்வுகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என்ற அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.