‘ஃபாஹ்மியை நிபந்தனையின்றி விடுதலை செய்க’ – மனித உரிமை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஆர்வலரும் சுயாதீன வடிவமைப்பாளருமான ஃபாஹ்மி ரேஸாவை உடனடியாக விடுவிக்குமாறு பல சிவில் சமூக அமைப்புகள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தன.

கேலி பொருட்களைத் தயாரிப்பது குற்றம் அல்ல என்று அவர்கள் கூறினார்கள்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ஐ மீறுதல் மற்றும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் அடிப்படையில், விசாரணைக்காக ஃபாஹ்மி கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த அழைப்புகள் வந்தன.

இந்தத் தடுப்புக்காவல், இராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு ஹஜா அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவுடன் தொடர்புடைய #டெங்கிகெ (#DengkiKe) பிரச்சினை தொடர்பாக, ஃபாஹ்மியின் வடிவமைப்பு குறித்து பல்வேறு தரப்பினர் போலிஸ் புகார் அளித்ததன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

சுதந்திரப் பத்திரிகை மையத்தின் (சிஐஜே) கருத்துப்படி, கேலி அல்லது நையாண்டி படைப்புகள், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளில் ஒன்றாக மத்திய அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகின்றன.

“சுதந்திரத்திற்கான அந்த உரிமையை அரசாங்கம் தன்னிச்சையாக குறைமதிப்பிட முடியாது,” என்று சிஐஜே தனது கீச்சகத்தின் மூலம் கூறியது.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான எம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா, ஃபாஹ்மியை உடனடியாக, நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தது.

“தேசத்துரோகச் சட்டத்தின் கடுமையான சட்டங்கள் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவை, விமர்சகர்களையும் அவர்களுடன் உடன்படாதவர்களையும் மௌனமாக்குவதற்கான கருவிகளாக அதிகாரிகளால் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

“இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும்,” என்று அது கூறியது.

மற்றொரு மனித உரிமை அமைப்பான, சுவாராம், தங்கள் சமூக ஊடகங்களில் ஃபாஹ்மியை விடுவிக்கக் கோரும் சுவரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டது.

அந்தச் சுவரொட்டியில் “அரசியல் நையாண்டி ஒரு குற்றம் அல்ல” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில், ஃபாஹ்மி தனது வீட்டில் கைது செய்யப்பட்டு, டாங் வாங்கி மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு (ஐபிடி) விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தடுப்புக் காவலில் வைக்க அனுமதி பெற, போலீசார் அவரை ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு, ஃபாஹ்மி ஐபிடி சிறைக்கட்டறையில் தனது இரவைக் கழித்தார்.