டாங் வாங்கி ஐ.பி.டி.-யில் ஃபாஹ்மி ரெசாவுக்காக நண்பர்கள் கூட்டம்

தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆர்வலரும் வடிவமைப்பாளருமான ஃபாஹ்மி ரேசாவுக்கு விசுவாசமான நண்பர்கள் சுமார் 20 பேர், இன்று காலை டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்திற்கு (ஐ.பி.டி.) வெளியே ஒன்று கூடினர்.

இன்று காலை 10 மணிக்குத் திட்டமிடப்பட்ட தடுப்புக்காவல் விண்ணப்பத்திற்கு, ஃபாஹ்மியை வழக்கறிஞர் யோஹேந்திரா நடராஜன் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று சக ஆர்வலர் காலிட் இஸ்மத் தெரிவித்தார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஃபாஹ்மி ஒரு தேசத்துரோக வழக்கு விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​தற்போதுள்ள பல ஆர்வலர்கள் அதே இடத்தில் கூடியிருந்தனர் என்றும் அவர் கூறினார்.

இன்று, இந்தக் குழு ஃபாஹ்மியை உடனடியாக விடுவிக்கக் கோரியது.

தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து, கையொப்பங்களுடனான தட்டிகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர்.

இராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு ஹஜா அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவை அவமதித்ததாகக் கூறப்படும், “பொறாமையா” (“dengki ke”) என்றக் கருப்பொருளைக் கொண்ட ஸ்போடிஃபை (Spotify) பாடல்களின் பட்டியலுக்காக நேற்று இரவு ஃபாஹ்மி கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு, புக்கிட் அமான் ஜே.எஸ்.ஜே. இயக்குநர் ஹுசிர் மொஹமட் வழங்கிய இணைப்பின் அடிப்படையில், அந்தப் ‘பிளேலிஸ்ட்‘ ஆரம்பத்தில் பேரரசியாரின் உருவப்படத்துடன், “இது பொறாமையா?” (“This is Dengki Ke?”) என்று காட்சி படுத்தப்பட்டிருந்தது.

அது, பல்வேறு கலைஞர்களின், ஆங்கிலம் மற்றும் மலாய் பாடல்களின் பட்டியல் ஆகும், 101 பாடல்கள் கொண்ட அதில், கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களுமே ‘பொறாமை’யைக் கருப்பொருளாகக் கொண்டவை.

நேற்றிரவு, ஃபாஹ்மியின் வழக்கை குற்றவியல் புலனாய்வு பிரிவு, சிவில் சேவையின் பிரிவு டி5, தேசத்துரோகச் சட்டம் 1948-இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும் எனப் புக்கிட் அமான் தெரிவித்தது.