‘தேர்ந்தெடுக்கப்பட்ட தண்டனையை’ நிறுத்துக, அரசாங்கத்திற்கு வலியுறுத்து

Kitabantukita.org (கீத்தாபந்துகீத்தா) என்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, இரண்டு தாய்மொழி போராட்ட அமைப்புகள், தாய்மொழி பள்ளிகள் மீதான “அச்சுறுத்தல்கள்” குறித்து மத்திய அரசு மௌனம் சாதிப்பது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் இருப்பது, தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் அவை வலியுறுத்தின.

சீன மொழி மன்றத் தலைவர் ஏடி ஹெங் ஹோங் சாய், கல்வி தொடர்பான பிரச்சினைகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தண்டனை’ நடைமுறையில் அரசாங்கம் அதிக உணர்திறன் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

“தாய்மொழி பள்ளிகளில் எதிர்மறையான தாக்கத்தையும் பிளவையும் தூண்டும் வகையில் செயல்படும் சில தரப்பினர் மீது அரசாங்கம் மௌனம் காப்பதையும், அதே நேரத்தில் தாய்மொழிப் பள்ளிகளைப் பாதுகாக்க அமைதியாக கூடியிருக்கும் நபர்களைத் தண்டிக்க முயற்சிப்பதையும் நான் எதிர்க்கிறேன்.

“இதுபோன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தண்டனைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்,” என்று நேற்று கோலாலம்பூரில், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அண்மையில், பூச்சோங், பண்டார் கின்ராராவில் சீனமொழிப் பள்ளி கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்திய சுபாங் அம்னோவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது ஹெங் இவ்வாறு கூறினார்.

ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எழுவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றார் அவர்.

“ஜெராந்துட்டில் ஒரு சிலர் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர், இது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது, ஆனால் சீனப் பள்ளிகள் கட்டப்படுவதை எதிர்த்தவர்களை, அது மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்ற காரணத்துடன் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

“இது போன்ற பாரபட்சங்கள் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டு மக்களிடையே பிளவுகள் ஏற்படும்,” என்று அவர் கூறினார்.

காட் ஆர்ட் ஆக்சன் டீம் (செகாட்) கூட்டணியின் இணை நிறுவனரான அருண் துரைசாமி மற்றும் சஷி குமார், மற்றும் Kitabantukita.org பிரதிநிதியாக பேராசிரியர் டாக்டர் மொஹமட் தாஜுட்டின் மொஹமட் ராஸ்டி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 19-ம் தேதி, சுபாங் அம்னோ தலைவர் அர்மண்ட் அஸா அபு ஹனிஃபாவும், பண்டார் கின்ராராவில் வசிப்பவர்களும் சேர்ந்து, தூ ஜூன் ஹிங் சீனப்பள்ளி கட்டுமானம் அங்குள்ள மக்கள் தொகைக்கு (இனவாரியாக) ஏற்றதாக இல்லை என்று கூறி ஒரு போராட்டத்தை நடத்தினர்.

இதற்கிடையில், தேசிய ஒற்றுமை குறித்த கூற்றுக்களை மொஹமட் தாஜுட்டின் நிராகரித்தார், ஏனெனில் இந்த நாட்டு மக்கள் மலாய் மொழி தவிர வேறு மொழிகளையும் கற்க வேண்டும்.

“வரலாற்று ரீதியாக, ஹாங் துவா 12 மொழிகளில் சரளமாக பேசுவார். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது,” என்று அந்த இஸ்லாமிய கட்டிடக் கலைஞர் கூறினார்.