‘அவசர அவசரமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டன’, அமைச்சர் பதவி விலக வேண்டும் –  எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

இன்றைய அதிநவீனக் கல்வி நிறுவனங்களில், கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பிற்குக் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

பள்ளிகள், ‘அவசர அவசர’மாக மீண்டும் திறக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறினர்.

கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்துள்ளதால், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இப்போது கவலையில் இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.

இல்லமிருந்து கற்றல் மற்றும் கற்பித்தல் (பி.டி.பி.ஆர்.) அறிவிக்கப்பட்ட சிறிது காலத்திலேயேப் பள்ளிகள் அவசர அவசரமாக திறக்கப்பட்டன என்றும், கோவிட் -19 தொற்றுகளைப் பள்ளிகள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்ஓபி) பற்றியத் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஏப்ரல் 21 அன்றுதான், நேர்மறையான சோதனை முடிவுகள் உள்ள பள்ளிகள், குறைந்தது இரண்டு நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று துணைக் கல்வி அமைச்சர் மா ஹாங் சூன் தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக, சில பள்ளிகள் பாதிக்கப்பட்ட வகுப்புகளை மட்டுமே மூட முடிவு செய்தன.

“இப்போது என்ன நடக்கிறது என்றால், பள்ளிகளில் நேர்வுகள் அதிகரிக்கும் போது பள்ளி நிர்வாகம் திசையையும் காரணத்தையும் இழந்து வருகிறது, எனவே, பள்ளிகள் மூடப்படும் போது அவை பிடிபிஆருக்குத் தயாராக இல்லை,” என்று அவர்கள் கூறினர்.

நிலைமை எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்த தெளிவான தகவலும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

எனவே, கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடினும் இரண்டு துணையமைச்சர்களான மா மற்றும் முஸ்லீமின் யஹ்யா ஆகியோரும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

“(அவர்கள்) மக்கள் எதிர்பார்த்தபடி தங்கள் கடமைகளைச் செய்வதில் தோல்வியுற்றதாகக் காணப்படுகின்றனர், எனவே மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்காக உடனடியாகப் பதவி விலக வேண்டும்,” என்று அவர்கள் மேலும் கூறினர்.

இந்த அறிக்கையில், பி.கே.ஆர்., டிஏபி, அமானா, உப்கோ, பெஜூவாங், மூடா, வாரிசான் ஆகிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலருடன், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினரும், பி.எச். கல்வி குழுவின் தலைவருமான முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் கையெழுத்திட்டுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின் கூற்றுப்படி, கல்வித்துறையில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரையில், மொத்தம் 4,868 நேர்மறை நேர்வுகள் புகாரளிக்கப்பட்டுள்ளன.