‘முஹைதீனுக்கு அதிக ஆதரவு, பி.என். சரியான பாதையில் உள்ளது என்பதற்கு சான்று’

ஒரு கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ளபடி, பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவு தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் சரியான பாதையில் செல்வதைக் காட்டுகிறது என்று ஸ்ரீகாண்டி பெர்சத்து துணைத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவில், 67 விழுக்காடு வாக்காளர்கள் முஹைதீனின் தலைமையில் திருப்தி அடைந்துள்ளனர் என்று மெர்டேக்கா மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து மாஸ் எர்மியாட்டி இவ்வாறு கூறினார்.

மலாய்க்காரர்களிடையே முஹைதீனின் ஏற்றுக்கொள்ளல் அதிகமாக உள்ளது என்றும், அது 83 விழுக்காடு உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

“இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் நலனை நிர்வகிப்பதில் முஹைதீன் மற்றும் அவரது பிஎன் அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த வாக்காளர்களின் வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அரசாங்கத்தைக் களங்கப்படுத்த, எதிர்க்கட்சியினர் வெளிபடுத்திய அனைத்து கருத்துக்களையும் இது நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

“எதிர்க்கட்சி பெரும்பாலும் மக்களின் உணர்வுகளைப் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் மலிவான வித்தைகளால் தூண்டி விடுகிறது.

“என்னைப் பொறுத்தவரை, இது அவர்களின் சொந்த பலவீனங்களை மறைப்பதாகும். உண்மையில், மக்கள் தங்கள் நலனைக் கவனிப்பதில் முஹைதீன் மற்றும் பிஎன் அரசாங்கத்தின் அக்கறையையும், அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் ஒப்புக்கொள்கிறார்கள்,” என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக மாஸ் எர்மியாட்டி கூறினார்.

நாடு தொற்றுநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்பதால் இது முக்கியமானது என்று அவர் கூறினார்.