ஃபாஹ்மி ரேசாவுக்குத் தடுப்புக் காவல் ஒருநாள் மட்டுமே

வடிவமைப்புக் கலைஞரும் ஆர்வலருமான ஃபாஹ்மி ரேசா தேசத்துரோகக் குற்றச்சாட்டிற்காக ஒருநாள் தடுத்து வைக்கப்பட்டார், இன்று பிற்பகல் அவர் விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது, ஃபாஹ்மி-ஐ நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்க கேட்டு போலிசார் மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

எனினும், மாஜிஸ்திரேட் நித்யா ரவீந்திரன் ஒருநாள் மட்டுமே தடுத்து வைக்க அனுமதித்தார் என்று ஃபாமியின் வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை கூறினார்.

“காவல்துறையினர் மூன்று காரணங்களை வழங்கினர் : அவரைப் படம் எடுக்க வேண்டும், அவரது கைரேகையையும் வாக்குமூலத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

“இவற்றையெல்லாம் சில மணிநேரங்களில் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுகிறோம் என்ற எங்கள் வாதத்தைக் கேட்டபின், நீதிபதி ஒருநாள் மட்டும் தடுத்து வைக்க அனுமதி வழங்க முடிவு செய்தார்,” என்று வழக்கறிஞர் யோஹேந்திரா நடராஜனுடன் வந்த ராஜ்சூரியன் கூறினார்.

புக்கிட் அமான் இரகசியக் குற்றப்பிரிவின் பொறுப்பு விசாரணை அதிகாரி, இன்று பிற்பகல் ஃபாஹ்மியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என்று ராஜ்சூரியன் கூறினார்.

“அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்… இன்று மாலை 5 அல்லது 6 மணிக்குள்,” என்று அவர் மேலும் கூறினார்.