கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி வரையில் கிளந்தானில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டன.
இத்தகவலை, நேற்று மற்றும் இன்றிரவு, இரண்டு தனித்தனி அறிவிப்புகள் மூலம் மாநிலக் கல்வித் துறை (ஜே.பி.என்.) இயக்குநர் சுல்கர்னை ஃபௌஸி தெரிவித்தார்.
நேற்றைய ஓர் அறிவிப்பில், ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் மட்டுமே மூடப்படும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், இரவு அறிவிப்பில், குவா முசாங், கோல கிராய் மற்றும் ஜெலி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் மே 1 வரை மூடப்படும் என ஜே.பி.என் அறிவித்ததுள்ளது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமலாக்கமும் தற்போதைய நிலைமையும் பள்ளிகள் மூடப்படுவதற்குக் காரணமாகும்.
“விடுதிகளில் வசிக்கும் அனைத்து மாணவர்களும் விடுதிகளிலேயேத் தங்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியப் பள்ளிகளை மூடுவது, நேற்று கிளந்தான் மாநிலப் பேரிடர் மேலாண்மை (சிறப்பு) குழு – கோவிட் -19 அமலாக்கக் கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது என்று அவர் மேலும் விளக்கினார்.
“பள்ளி மூடலின் போது, மாணவர்களின் தகவல்தொடர்புக்கான அணுகல் மற்றும் திறன்களின் அடிப்படையில், அனைத்து ஆசிரியர்களும் இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றலை (பி.டி.பி.ஆர்.) செயல்படுத்துவர்.
“அனைத்து பள்ளிகளும் எஸ்ஓபி-க்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய, மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,” என்று சுல்கர்னை கூறினார்.
முன்னதாக, மாநிலத்தில் பி.கே.பி. அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கிளந்தானில் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் ஏப்ரல் 18 முதல் 22 வரை மூடப்பட்டன.