மனித மலேரியா நோய்த்தொற்றில் சுழியம் இலக்கை அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, மலேரியா சம்பந்தப்பட்ட விலங்கு (ஸூனோடிக்) நோய்த்தொற்றுகளில் மலேசியா தனது கவனத்தை விரிவுபடுத்தும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
உள்ளூர் மலேரியா நோய்த்தொற்றின் நேர்வுகளின் சுழிய இலக்கு, தொடர்ச்சியாக 2018 முதல் 2020 வரையில், மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் அடையப்பட்டுள்ளது என்றார் அவர்.
“கோவிட் -19 தொற்றுநோயின் சவால்கள் இருந்தபோதிலும், மலேரியாவை ஒழிப்பதில் மலேசியா தனது முயற்சிகளைத் தொடர்கிறது,” என்று அவர் இன்று 2021 தேசிய உலக மலேரியாத் தினக் கொண்டாட்டத்தின் தொடக்க உரையில் கூறினார்.
1961-ம் ஆண்டில் நாட்டில் இருந்த 250,000 நேர்வுகளில் இருந்து, 2000-ஆம் ஆண்டில் 12,000 ஆக மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.
2017-ஆம் ஆண்டில், 85-ஆக பதிவான மலேரியா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், 2018 முதல் 2020 வரை சுழியமான இருப்பதாகவும் டாக்டர் ஆடாம் தெரிவித்தார்.
உள்ளூர் மலேரியா நோய்த்தொற்றின் சுழிய நிலையைத் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகப் பராமரிப்பதன் வெற்றியைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிலிருந்து மலேரியா ஒழிப்பு சான்றிதழ் பெற மலேசியா தகுதி பெற்றுள்ளது என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.
“இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி என்பது சுகாதார அமைச்சு மேற்கொள்ளு தடுப்பு நடவடிக்கைகள் துல்லியமானவை, மேலும் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என்று பொருள்படும்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா