5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை, வெளிநாட்டு தொழிலாளி தற்கொலை

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில், பாகிஸ்தான் கட்டுமானத் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

30 வயதான பாதிக்கப்பட்டவர், தான் பணிபுரிந்த நிறுவனம் தனது சம்பளத்தை ஐந்து மாதங்களாகச் செலுத்தவில்லை என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர், சமூக ஊடகத் தளமான ‘டிக் டோக்’ வீடியோ பதிவு ஒன்றில், தனது முதலாளி சம்பளத்தைச் செலுத்தாததால் “தாக்குப் பிடிக்க முடியவில்லை,” என்று கூறியிருந்தார்.

“நான் ஒரு வீடியோ தயாரிக்க விரும்புகிறேன். என்னுடைய முதலாளி, அவர் ஐந்து மாதங்களாக என் சம்பளத்தைச் செலுத்தவில்லை. என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான் இறப்பதற்குக் காரணம் என்னுடைய முதலாளி … தயவுசெய்து நண்பர்களே, அவரைக் கண்டுபிடியுங்கள்,” என்று அவர் அந்த வீடியோ கிளிப்பில் பேசியிருந்தார்.

பாதிக்கப்பட்டவர் தனது முதலாளியைப் பற்றிய விவரங்களைக் கொண்ட மற்றொரு வீடியோவையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விசாரணையின் அடிப்படையில், 2020 டிசம்பர் முதல் 2021 ஏப்ரல் வரையில் அக்கட்டுமான நிறுவனம் சம்பளம் வழங்காததால், பாதிக்கப்பட்டவர் நிதி சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார் என்று வங்சா மாஜு போலீஸ் தலைவர் ஆஷாரி அபு சமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

பலியானவர் ஷாஸாட் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

“பி.கே.பி. காரணமாக முதலாளிக்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. முதலாளி கொஞ்சம் பணம் செலுத்த விரும்பியுள்ளார், ஆனால் ஷாஸாட் முழு சம்பளத்தையும் பெற விரும்பியுள்ளார்.

“அவரது சக ஊழியர், ஷாஸாட்டுக்குக் குடும்பப் பிரச்சினைகள் இருந்ததாகவும், குடும்பத்தினர் பணம் அனுப்பச் சொன்னதால் மனச்சோர்வு அடைந்ததாகவும் கூறினார்,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் 2019 முதல் மலேசியாவில் பணிபுரிந்து வருவதாகவும், இங்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றும் ஆஷாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், கட்டுமான நிறுவனமான லேண்ட்சீல் சென். பெர்.-இன் தலைமை நிர்வாக அதிகாரி இராதா கிருஷ்ணன், ஷாஸாட்டின் உடலைப் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கான மொத்தச் செலவையும் தனது நிறுவனம் ஏற்கும் என்றும், அவரது குடும்பத்திற்கு நல்லெண்ண கொடுப்பனவுகளை வழங்கும் என்றும் கூறினார்.

சம்பளம் வழங்கப்படாத விரக்தியால்தான் இந்த மரணம் ஏற்பட்டது என்றக் குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டபோது, ​​இந்த விஷயம் போலிஸ் விசாரணையில் இருப்பதால், தான் கருத்து தெரிவிக்க முடியாது என்று கிருஷ்ணன் கூறினார்.

நீங்கள் மனச்சோர்வில் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தால், அல்லது அந்தச் சூழ்நிலையில் யாராவது இருப்பது தெரிந்தால், பின்வரும் அவசரத் தொலைத்தொடர்பு எண்களுக்கு அழைக்கவும்:

மலேசியா அகபே ஆலோசனை மையம் (Pusat Kaunseling Agape Malaysia) : 03-77855955 அல்லது 7781 0800

தி பிபிரண்டர்ஸ் (The Befrienders) : 03-79568144 அல்லது 03-79568145

லைஃப் லைன் அசோசியேஷன் மலேசியா (Life Line Association Malaysia) : 03-42657995