இந்த ஆண்டு, 12 வயதிற்குட்பட்ட மொத்தம் 23,739 மாணவர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார்.
அதேசமயம், 2020-ஆம் ஆண்டில் இதுபோன்று 8,369 நேர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
“மாணவர் இடையேயான கலப்பு காரணமாகப், பள்ளிகளில் எளிதாக தொற்றுகள் பரவுகின்றன என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அனைத்து மாவட்டச் சுகாதார அலுவலகங்களுக்கும் பள்ளிகளில் சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற கோவிட் -19 அறிகுறிகள் மாணவர்களிடையேக் காணப்பட்டால், பள்ளியில் சேர்க்காமல் இருக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், மாணவர்களின் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்குக் கோவிட் -19 அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது.
“வீட்டிலேயேத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களின் குழந்தைகளும் பள்ளிக்கு வர முடியாது. கோவிட் -19 சோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாது,” என்றார் அவர்.