நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு, பள்ளி அமர்வு இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) முறையில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் சற்று முன்னர் தெரிவித்தார்.
இந்தக் கற்றல் அமர்வு, ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு (குழு ஏ) ஆகிய மாநிலப் பள்ளிகளில் மே 16 முதல் 27 வரையிலும், பெர்லிஸ், பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பஹாங், சபா, சரவாக், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய குழு பி பள்ளிகளில் மே 17 முதல் 28 வரையிலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
குழு ஏ பள்ளிகளுக்கு மே 7 முதல் 15 வரையிலும், குழு பி பள்ளிகளுக்கு மே 8 முதல் 16 வரையிலும் திட்டமிடப்பட்ட நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகளில் கோவிட் -19 தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராட்ஸி கூறினார்.
பி.டி.பி.ஆர். காலத்திற்குப் பிறகு, குழு ஏ பள்ளி மாணவர்கள் மே 28 முதல் ஜூன் 12 வரையிலும், குழு பி பள்ளி மாணவர்கள் மே 29 முதல் ஜூன் 13 வரையிலும் பள்ளி பள்ளி அரையாண்டு தவணை விடுப்பைத் தொடருவார்கள் என அவர் மேலும் சொன்னார்.
“இது நாம் இப்போது கற்றுக்கொண்ட ஒன்று. கடந்த ஆண்டு நோன்புப் பெருநாள் விடுமுறையின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், பெருநாளுக்குப் பிறகு தரவு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
“குறிப்பாக, உறைவிடப் பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவர்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம், ஏனென்றால் அவர்கள் தொற்றுநோயை வெளியில் இருந்து கொண்டுவர வாய்ப்புண்டு, எனவே பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம், பெருநாள் விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் வீட்டில் அதிக நேரம் இருப்பார்கள்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
நாடு முழுவதும், கல்வியமைச்சின் கீழ் உள்ள உறைவிடப்பள்ளி மாணவர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இல்லம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விடுமுறைக்கு இரண்டு வாரங்களுக்குள் பி.டி.பி.ஆர். வழி கல்வி கற்பார்கள் என்றும் ராட்ஸி கூறினார்.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டிற்கான பள்ளி அட்டவணையில், நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு, மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குக் கற்றல் அமர்வைத் தொடரப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும், அதன்பிறகு பள்ளி அரையாண்டு தவணை விடுமுறை தொடங்க இருந்தது.