நாடாளுமன்ற அமர்வு இல்லாததன் நியாயத்தன்மையை அரசாங்கம் தொடர்ந்து காத்துக்கொண்டிருப்பதைக் கண்ட நஜிப் ரசாக், தேசியக் கூட்டணி (பி.என்.) அமைச்சர்களில் ஒருவரைக் கேலியாக அவதூறு பேசியுள்ளார்.
உள்துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசானின் ஓர் செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டி குறிப்பிடுகையில், பொது மக்களைவிட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கே பி.என். அரசாங்கம் இப்போது முன்னுரிமை அளிப்பதைக் காண்பதாகக் கூறினார்.
“தடுப்பூசி போடப்பட்ட எம்.பி.க்களுக்குக் கோவிட் -19 தொற்று பரவாமல், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே பி.என். அரசாங்கத்தின் முன்னுரிமையாகத் தற்போது உள்ளது.
“பல்லாயிரக்கணக்கானப் பள்ளி குழந்தைகள், அதிகாலை 2 மணி வரையில் இரமலான் சந்தைக்குச் செல்லும் பொது மக்களின் உடல்நலம், ஹோட்டல் மற்றும் மாநாடுகள், இரவு சந்தைகள், பி.என். அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள், சினிமாக்கள், உடம்புப் பிடி மையங்கள், ‘வணிக வளாகங்கள்’, 4டி கடைகள், கெந்திங் கெசினோ’க்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாத மற்றவர்களின் நிலை என்ன?
“அவர்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை, அது பி.என். அரசாங்கத்திற்கு முன்னுரிமை இல்லை?” என்று நஜிப் தனது முகநூல் பதிவில் எழுதியுள்ளார்.
முன்னதாக, தக்கியுடின், அவசரநிலை முடிவதற்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பின்னரோ சரியான நேரம் வரும்போது உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்ததாகக் கூறினார்.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் கவலை எழுப்பியபோது, நாடாளுமன்ற அமர்வு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பாஸ் தலைமைச் செயலாளரான அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார்.
இருப்பினும், தக்கியுடினின் கூற்றுப்படி, நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பதா இல்லையா என்பது பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தது, குறிப்பாக சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனைகளை.
நேற்று இரவு, அம்னோ உச்ச மன்றமும் உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.