‘1எம்.டி.பி. நிதி தீர்விலிருந்து கிடைக்கப்பெற்ற பணம் எங்கே?’

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 2018-ம் ஆண்டிலிருந்து 1எம்.டி.பி. நிதி தீர்விலிருந்து மலேசிய அரசாங்கத்திற்குக் கிடைத்த பணம் மற்றும் சொத்துக்கள் எங்கே என்று கேளிவி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தால் அதிகக் கடனைத் தாங்க முடியாததற்குக் காரணம் 1எம்.டி.பி.-இன் கடன் என்று குற்றம் சாட்டிய நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, புத்ராஜெயா தேசிய அறக்கட்டளை நிதியிலிருந்து RM5 பில்லியனைப் பயன்படுத்த வேண்டியிருப்பதன் காரணம் குறித்து தெரிவிக்கையில் தெங்கு ஜஃப்ருல் இதனைக் கூறினார்.

“(தெங்கு ஜஃப்ருல்) இது இரமலான் மாதமாக இருந்த போதிலும், (முன்னாள் நிதியமைச்சர்) லிம் குவான் எங் போலப் பேசத் தொடங்கிவிட்டார்.

“1எம்டிபியின் கடன் பற்றி கூறினார், ஆனால் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் அதன் சொத்துக்கள் ஆகியவற்றை விளக்கவில்லை,” என்று நஜிப் நேற்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டில் தேசிய முன்னணி அரசாங்கத்தை விட்டு வெளியேறியபோது 1எம்டிபி-இன் கடன் RM32.2 பில்லியனாக இருந்தது, 2021-ஆம் ஆண்டில் 1எம்டிபி-இன் கடன் RM32.3 பில்லியனாக அதிகரித்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

“14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராப்பானும் தேசியக் கூட்டணியும் ஒரு சென்-ஐக்கூட செலுத்தவில்லை.” என்று நஜிப் மேலும் சொன்னார்.

இதற்கிடையில், 1எம்.டி.பி. வழக்கிற்குத் தீர்வுகாண, அதன் தொடர்பான தரப்பினரிடமிருந்து – அவரின் வளர்ப்பு மகன் ரிஸா அஜீஸ், முதலீட்டு நிறுவனங்களான கோல்ட்மேன் சாச்ஸ், அம்பேங்க் மற்றும் டெலோய்ட் உள்ளிட்ட – அரசாங்கத்திற்குத் திரும்பியதாகக் கூறப்படும் தொகையை நஜிப் பட்டியலிட்டார்.

1எம்.டி.பி. தொடர்புடைய சொத்துக்களின் விற்பனையும் இருந்தது, இதில் RM523 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஈக்குவானிமிட்டி ஆடம்பரப் படகும் அடங்கும் என நஜிப் கூறினார்.

பல்வேறு விற்பனை மற்றும் தீர்வுகள் குறித்த ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், இதுவரை அரசாங்கம் பெற்ற மொத்தப் பணம் RM33.4 பில்லியன் என்று நஜிப் விளக்கினார்.

இது தவிர, 1எம்.டி.பி.-இன் கீழ் இன்னும் அதிகமான சொத்துக்கள் உள்ளன, அதாவது துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், இது RM40 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பண்டார் மலேசியாவில் 40 விழுக்காடு பங்கு RM140 பில்லியன் மதிப்புடையது என்று கூறப்படுகிறது என்றார் அவர்.

உண்மையான மதிப்பு அறிவிக்கப்படவில்லை என்றாலும், எக்ஸ்சேஞ்ச் 106 கட்டிடத்தின் விற்பனையும் அதில் இருந்தது அவர் மேலும் கூறினார்.

இதேபோல், கேபிஎம்ஜி மற்றும் அபுடாபி சர்வதேசப் பெட்ரோலிய முதலீட்டு நிறுவனம் (ஐபிஐசி) போன்ற பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்வுகள் உள்ளன என்று நஜிப் மேலும் கூறினார்.

“இந்த சொத்துக்களை இன்னும் கணக்கிடவில்லையா?

“1எம்.டி.பி. கடன் சுமையாக உள்ளது, ஆனால் RM33.4 பில்லியன் மற்றும் 1எம்.டி.பி.-இன் மீதமுள்ள சொத்துக்கள் இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட் மதிப்புடையவை, இவை சுமையை எளிதாக்கவில்லையா?

“[…] 8-வது பிரதமர் தான் செலவழித்ததாகக் கூறிய RM600 பில்லியன், தேசியக் கூட்டணி அதை எங்கிருந்து பெற்றது? தேசியக் கூட்டணி சின்ன வயடிலிருந்து சிறிது சிறியதாகச் சேமித்து வந்ததா?” என நஜிப் கேலி பேசினார்.

முன்னதாக, தெங்கு ஜஃப்ருல், அரசாங்கத்தால் அதிகக் கடன்களைத் தாங்க முடியாது, ஏற்கனவே RM1 டிரில்லியன் கடன்கள் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

“பணம் செலுத்த வளங்கள் இல்லாதக் கடன்களான 1எம்.டி.பி. மற்றும் தனியார் நிதி சமநிலை செலவுகளும் இதில் அடங்கும்.

“எடுத்துக்காட்டாக, 1எம்.டி.பி.-இன் RM40 பில்லியன், அரசாங்கத்தின் எட்டு தடுப்பூசி திட்டங்களுக்குப் போதுமானது,” என்று ஜாஃப்ருல் கூறினார்.